சென்னை: கடந்தாண்டு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பதாகை ஏந்தி, மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியது ஞாபகத்தில் இல்லையோ? என, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் இன்று (ஜூன்.11) வெளியிட்ட அறிக்கையில்," கடந்தாண்டு கரோனா நோய்த்தொற்றின் போது மதுக்கடைகளை மூட வேண்டும் என்று திமுக போராடிவிட்டு, இப்போது மதுக்கடைகளைத் திறக்க முயல்வது என்ன நியாயம்?
மே 7, 2020ஆம் தேதி அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் பதாகை ஏந்தி போராடியது ஞாபகத்தில் இல்லையோ?
திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகளையே மூடுவோம் என்று தெரிவித்தார்.
'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று டாஸ்மாக் கடைகளின் பெயர்ப் பலகைகளிலும், மது பாட்டில்களிலும் எழுதி வைத்துவிட்டு, மதுவை விற்பனை செய்வதை விட, பெரிய முரண்பாடு இருக்க முடியாது.
மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு இருக்க முடியாது. மதுக்கடைகள் மூடப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஏராளமான வழிகள் உள்ளன.
தமிழ்நாடு அரசோ கரோனா நோய்த்தொற்றின் அபாயம் அதிகமுள்ள காரணத்தால், மதுக்கடைகளை மூடியுள்ளது. தற்பொழுது கரோனா நோய்த் தொற்றின் அபாயம் குறைந்து வருகிறது என்பதால், பல மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறக்க தயாராகி வருவது தமிழ்நாட்டிற்கு பேராபத்தில் முடியும்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிப்பழக்கம் துறந்து தங்கள் குடும்பத்துடன் அமைதியாக வாழும் தமிழ்நாட்டு மக்களை மதுக்கடைகளைத் திறந்து மீண்டும் குடிப்பழக்கத்தில் ஆழ்த்த முயலும் இந்த அபத்தமான முடிவை எதிர்ப்போம். சமுக அக்கறை உள்ள யாரும் இதனை வரவேற்க மாட்டார்கள்.