தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹாட் பாக்ஸ், கொலுசு கொடுத்து பெற்ற வெற்றிதான் திராவிட மாடலா? - அண்ணாமலை அதிரடி - சென்னையில் பாஜக வெற்றி

ஹாட் பாக்ஸ், கொலுசு, இரண்டாயிரம் ரூபாய் ஆகியவற்றை கொடுத்து வெற்றி பெறுவதுதான் திராவிட மாடல் வெற்றியா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Feb 23, 2022, 7:41 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப். 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப். 22) நடைபெற்றது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது மட்டுமல்லாமல் நகராட்சி, பேரூராட்சிகளிலும் பெரும்பாலன இடங்களை அக்கட்சி வென்றுள்ளது.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அற்புதமான வெற்றியை பெற்றுள்ளது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் இல்லையோ, அங்கெல்லாம் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

கட்சியை வலுபடுத்துவதற்காக பிரதமர் மோடியின் கொள்கைகளை வீடுதோறும் கொண்டு சேர்க்க தனித்து போட்டியிட்டோம். மக்கள் மகத்தான வெற்றியை தந்துள்ளனர். தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ள திமுகவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

3ஆவது இடத்தில் பாஜக

தமிழ்நாட்டில் வாக்கு சதவீகித அடிப்படையில் பாஜகவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. மக்கள் தேசியத்தின் பின்னால் திரும்பியுள்ளதற்கு இந்த தேர்தல் ஒரு சாட்சி. தமிழ்நாடு மக்கள் பாஜகவை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். எங்களுக்கு கொங்கு மண்டலத்தில் பரவலாக வாக்குகள் கிடைத்துள்ளது. சென்னையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நன்றி. கொங்கு மண்டலத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து போட்டியிடும்போது கொங்கு மண்டலம் எங்கள் கோட்டைதான். ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதால் கொங்கு மண்டலத்தை திமுக கோட்டையாக எடுத்துகொள்ள முடியாது.

ஒரு தேர்தலில் பின்னடைவை சந்தித்தாலும் அதிமுகவை குறைக் கூற முடியாது. அதிமுக மிகப்பெரிய வாக்கு வங்கியை கொண்டுள்ள கட்சி என்பதில் மாற்று கருத்தில்லை. காக்கா உட்கார்ந்து பனம் பழம் விழுந்த கதையாக முதலமைச்சர் சொல்லும் திராவிட மாடல் வெற்றி என்பது என்ன என விளக்க வேண்டும். ஹாட் பாக்ஸ், கொலுசு கொடுத்து வெற்றி பெறுவது தான் திராவிட மாடலா?, சிசிடிவி கேமராக்களை ஆஃப் செய்துவிட்டு ஓட்டு போடுவதுதான் திராவிட மாடலா? இல்லை, இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெறுவதுதான் திராவிட மாடல் வெற்றியா?" எனக் கேள்வியெழுப்பினார்.

மோடி மாடல் வெற்றி

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "எங்களுடைய வெற்றி என்பது பிரதமர் மோடியின் பார்முலா. தமிழ்நாட்டின் உள்ளே பாஜக வந்துவிட்டது. முதலில், 20 ஆண்டுகள் கழித்து 4 எம்எல்ஏக்களை பெற்றோம். தற்போது இந்த வெற்றி. நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ளோம். வரும் மக்களவை தேர்தலில் எத்தனை எம்.பி.,க்களை பாஜக பெற போகின்றது என்பதை மக்கள் தீர்மானிக்கிறார்களோ, இல்லையோ திமுக முடிவு செய்யும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் திமுக ரூ. 163 கோடி ஊழல் செய்துள்ளது. அது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் டெபாசிட் இழக்கும். காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவில் எங்கும் இடமில்லை என்ற நிலைதான் உள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் சுவாசத்தில் வாழ்ந்து விடலாம் என நினைக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி இல்லாதது பாஜகவுக்கு சாதகமாக இருந்து. இது தமிழ்நாடு பாஜகவில் அடுத்த கட்ட தலைவர்களை உருவாக்க உதவியுள்ளது.

பயணத்தைத் தொடங்கிய பாஜக

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது. மதுரை மேலூரில் எப்படி ஹிஜாப் விவகாரத்தில் பொய் பிரச்சாரம் செய்தார்களோ, அதுபோல்தான் ஜெயக்குமார் மீதும் திமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

லுங்கியுடன் குண்டுகட்டாக கைது செய்ய என்ன தேவை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக - பாஜக உறவு நல்ல நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியுள்ளது. பாஜகவின் லட்சியத்தை அடைய இந்த வெற்றி ஒரு மைல்கல்.

மக்களிடம் பாஜக மீது பரப்பியுள்ள பொய் கதைகளை இந்த தேர்தலில் அவர்கள் சுக்குநூறாக உடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பாஜக வளர உறுதுணையாக இருந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு நன்றி.

எனக்கு கவர்னர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகள் மீது ஆசையில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவு செய்துவிட்டு, எனது விருப்பமான தொழிலான விவசாயத்தை மேற்கொள்ள உள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: மலர்ந்தது தாமரை: மாநகராட்சிகளில் 21 வார்டுகளைத் தனதாக்கிய பாஜக!

ABOUT THE AUTHOR

...view details