சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜக மத்திய சென்னை தலைவரான பாலசந்தர் நேற்று படுகொலை செய்யப்பட்டார். அவரது இல்லத்தில் பாலச்சந்தர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "தமிழ்நாடு காவல்துறை குற்றச்செயல்களை தடுப்பதில் தோல்வி அடைந்து விட்டது. உளவுத்துறை முற்றிலும் செயல்படவில்லை. உயிரிழந்த பாலச்சந்தர் காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்னதாக கூட புகார் அளித்த நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் கூட அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம். தமிழ்நாட்டில் தினம் ஒரு கொலை என சர்வ சாதாரணமாக மக்கள் கூடும் இடங்களில் குற்றவாளிகள் முகக் கவசம் அணியாமல் கூட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை காவல்துறையில் வேடிக்கை பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்து விட்டது. குற்ற வழக்குகளில் 18 வயதில் இருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். குற்றவாளிகள் பெயரளவிற்கு மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் 3 மாதத்தில் வெளியே வந்து விடுகின்றனர்.
சிறைச்சாலைகளில் குற்றங்கள் : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என கூறும் முதலமைச்சர் அவரது குடும்பத்திற்கு தான் சிறப்பான பாதுகாப்பு உள்ளது. சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லை; அவ்வாறு இருந்திருந்தால் தற்போது ஒருவர் உயிரிழந்து இருக்க மாட்டார். தமிழ்நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் குற்றவாளிகள் குற்றங்களை மேலும், செய்ய தூண்டக்கூடிய வகையில் பல்கலைக்கழகம்போல் தெரிகிறது.