சென்னை: தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 10) ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டுவீசிவிட்டு நீட்டை ரத்துசெய்யாததைக் கண்டித்தே அவ்வாறு செய்ததாக விசாரணையின்போது அந்நபர் தெரிவித்ததாகக் காவல் துறையினர் கூறினர்.
இந்த விவாகாரம் தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதில் கூட்டுச்சதி உள்ளதாகவும், தேசிய புலனாய்வை முகமையான என்ஐஏ இதனை விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
மதக்கலவரம் உண்டாக்கத் திட்டமிட்ட திமுக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பாஜக நிர்வாகிகள், பிரமுகர்கள், அலுவலகங்கள் தாக்கப்படுவதற்கு கட்சியின் தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கமலாலயத்தில் பெட்ரோல் குண்டுவீசிய இடத்தை இன்று (பிப்ரவரி 12) பார்வையிட்ட பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, இந்தச் சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய ஹெச். ராஜா, 2007ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் அப்பொழுதும் இதேபோல் சம்பவம் நடந்ததையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் ஹிஜாப் விவகாரம் குறித்து, "அந்தப் பள்ளி 13 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பாக யாரோ ஒருவரின் ஆலோசனையின்படி மாணவிகள் இந்த விஷயத்தை பூதாகரமாக்கியுள்ளனர். இதில் நாடு முழுவதும் மதக்கலவரத்தை உருவாக்குவதற்கு திமுக திட்டமிட்டது" என்று ஹெச். ராஜா குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் திரும்புகிறது 1967-க்கு முந்தைய தேர்தல் அரசியல்
தொடர்ந்து பேசிய அவர், "பெருந்தலைவர் காமராஜ் 'அனைவரும் சரி சமம்' என்று சொல்லி அனைத்து மாணவர்கள் ஒரேவிதமாக ஆடை அணிய வேண்டும் என்று அறிமுகப்படுத்திய விஷயத்தை இப்பொழுது தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காகத் தேர்தலுக்காகப் பயன்படுத்துகிறார்கள்" என்று விமர்சித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஹெச். ராஜா விவரிக்கையில், "வருகின்ற மக்களவைத் தேர்தல் 2024 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற நடைமுறை இப்பொழுது புதிதாக வந்த மரபு அல்ல; 1967ஆம் ஆண்டு வரை இந்த விதி நடைமுறையில் இருந்தது" என்று சுட்டிக்காட்டினார். இப்பொழுது அதை பாஜக அரசு மீண்டும் கொண்டுவரவுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
கடந்த சில நாள்களாகத் தமிழ்நாடு முழுவதும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தான் பரப்புரைக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் பாஜகவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளிப்பதாக ஹெச். ராஜா தெரிவித்தார். மேலும், கடந்த எட்டு மாதங்களாகத் திமுகவின் ஆட்சி மக்களுக்கு மகிழ்ச்சியாக இல்லை என மக்கள் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
இதையும் படிங்க: இது 2007 அல்ல; பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - ஹெச்.ராஜா எச்சரிக்கை