கடந்த 1971ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ஆம் தேதியன்று இந்தியக் கடற்படை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியக் கடற்படையின் சாதனைகளை விளக்கும் வகையிலும், கடற்படையில் சேர இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடற்படை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக, தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேற்று (டிச.04) வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டிருந்தது.
அதில், இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களின் படத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக அமெரிக்க கடற்படைக் கப்பலின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலிச் செய்திகளை கண்டறிந்து வெளிப்படுத்தி வரும் ஆல்ட் நியூஸ் தளம், தமிழ்நாடு பாஜக டிவிட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படம் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான 55 லிட்டோரல் காம்பாட் கப்பல்கள் (55 Littoral Combat Ships) வகையைச் சேர்ந்தது என்றும், இந்தப் புகைப்படத்தை அமெரிக்க ஊடகங்கள் முன்னரே பயன்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாஜக இதுவரை இந்தப் பதிவை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடற்படை தினத்துக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமையகத்தின்அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கங்கள் இந்தப் படத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த கப்பலின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, இந்தியக் கடற்படை தினத்தைக் கொண்டாடிய பாஜகவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் கேலி செய்தும் வருகின்றனர்.
இதையும் படிங்க :ரஜினியைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை - ஈஸ்வரன்