சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் சலசலப்பை உண்டாக்குவது வழக்கம். இந்நிலையில், தற்போது கிறிஸ்துவ மதபோதகர்கள் குறித்து அவர் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கிறிஸ்துவர்கள் நடத்திய கல்வி நிலையங்களால் பல்வேறு தரப்பினர் கல்வி பெற்று தமிழகம் தற்போது வளர்ச்சியைடந்துள்ளது என்றும், அவர்கள் இல்லையென்றால் தமிழ்நாடும் பீகாரைப் போன்று கல்வியில் பின்தங்கியிருக்கும் என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று (ஜூலை 25) விடுத்துள்ள ட்வீட் பதிவில், 'திராவிட மாடல் என்று சொல்கின்ற இந்த அரசுக்கு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிறிஸ்தவ மதம்தான். கிறிஸ்துவ பாதிரியார்கள்தான் , உங்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த அரசு என்று முதல்வருக்கு தெரியும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவ மத போதகர்கள்தான். உங்களுக்கு மேல் கட்டப்பட்டது தான் இன்றைய தமிழகம்' என சபாநாயகர் அப்பாவு பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.