சென்னை:நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
பாதிப்புகள் குறித்த ஆய்வுக்கு மட்டுமே
இந்த வழக்கு இன்று (ஜூலை 13) மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிகள், "இந்த குழுவை அமைத்த அரசின் அறிவிப்பாணை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது அல்ல.
நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவே அரசு இந்தக் குழுவை அமைத்துள்ளது. நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவிக்க முடியும்" எனத் தெரிவித்தனர்.
விளம்பரத்துக்காக வழக்கா...?
மனுதாரர் கரு. நாகராஜன் தரப்பில், மாநில அரசு ஏ.கே. ராஜன் குழு அமைத்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், நீட் தேர்வால் மட்டுமே அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும், அனைத்து தரப்பினருக்கும் இடம் கிடைக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதா ? என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பாணைக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, நீட் பாதிப்பு குறித்து தமிழ்நாடு அரசு மக்கள் கருத்தைக் கேட்பது குறித்து கேள்வி எழுப்ப நீங்கள் யார் என மனுதாரர் கரு.நாகராஜனுக்கு கேள்வி எழுப்பி, விளம்பரத்துக்காக இது போன்ற வழக்குகள் தொடரப்படுவதாக கருத்து தெரிவித்தனர்.