நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் அறிவுசார் பிரிவுத் தலைவராக பொறுப்பு வகித்துவந்த அவர் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அண்மையில் கடிதம் ஒன்றை அளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று அர்ஜுனமூர்த்தியை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளரும், தலைமை அலுவலகப் பொறுப்பாளருமான கரு.நாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாஜக தொடங்கிய வேல் யாத்திரையின் மாஸ்டர் மைண்டாகக் கருதப்படும் அர்ஜுனமூர்த்திதான் நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கும் அமைப்பு ரீதியிலான வடிவம் கொடுக்கும் பணியை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளில் தலைமை ஒருங்கிணைப்பாளரான அர்ஜுனமூர்த்தியின் ஆலோசனை முக்கிய பங்கு வகிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.