தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினராக நான்சி ஆன் பிரான்சிஸ் சிந்தியா என்பவர் உள்ளார். இந்நிலையில் ஆங்கிலோ இந்தியன் இடத்தை ரத்துசெய்ய வேண்டும் என மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதன்படி, இந்தச் சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த மசோதா மீதான விவாதத்தில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினர் பிரான்சிஸ் சிந்தியா பேசுகையில், "சிறுபான்மையின பிரிவிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவாக நாங்கள் இருக்கிறோம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை 70 ஆண்டுகாலமாக நாங்கள் பெற்றுவந்துள்ளோம். இந்தச் செய்தியை கேட்டதும் எங்களுக்கு மனம் உடைந்துவிட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு எங்கள் சமூகம் பெரிதும் பங்காற்றியுள்ளது. கல்வி நிறுவனங்கள், ரயில்வே, தபால் நிறுவனங்களில் நாங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தோம். இந்த அரசு எங்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.