சென்னை:விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவைச்சேர்ந்தவர் பிரவீன் (25). இவர் இன்று அதிகாலையில் தனது தோழிகளான திருச்சியைச் சேர்ந்த தமிழரசி (22) மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐஸ்வர்யா (22) ஆகிய 2 பேரை பைக்கில் அழைத்துக்கொண்டு அடையாறு ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அடையாறு ஆற்றுப்பாலத்தில் இருந்த வேகத்தடை மீது பைக் வேகமாக ஏறி இறங்கியபோது, முன்னாள் சென்ற சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரவீன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீஸ் வழக்குப்பதிவு: தகவல் அறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தமிழரசியின் உடலைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த பிரவீன், ஐஸ்வர்யா ஆகியோரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து விபத்துச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரன் காய்கறிகளை ஏற்றி கொண்டு மயிலாப்பூர் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது.
சிக்கிய கஞ்சா பொட்டலம்:மேலும் விபத்துக்குள்ளாகி காயமடைந்த பிரவீன் என்பவரிடம் இருந்து கஞ்சா கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் கஞ்சா போதையில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு