தமிழக மக்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்த்த, தமிழக சட்டப்பேரவை தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. ஒரு பக்கம் தேர்தல் வேலைகளில் படு சுறுசுறுப்பாக இயங்கி வரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களையும், தலைவர்களையும், வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி ஒரு விஷயம் மட்டும் தூக்கமிழக்க வைத்துள்ளது. அதுதான் வருமான வரிச்சோதனை. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் நடந்து வரும் வருமான வரித்துறையின் அதிரடி சோதனைகளால், அரசியல்வாதிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
தமிழகத்தில் 118 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய தேர்தல் ஆணையம் அளித்த தகவலை அடுத்து, சட்ட விரோத பணப்பரிமாற்றம், பணம் பதுக்கல் ஆகியவற்றை கண்காணிக்க, கட்டுப்பாட்டு அறை ஒன்றை நிறுவி தீவிர வேட்டையில் இறங்கியது வருமான வரித்துறை. கடந்த 2 மாதங்களாக வந்த 300க்கும் மேற்பட்ட புகார்கள் தொடர்பாக, திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகள் மட்டுமின்றி, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களிலும் கடும் சோதனை நடத்தினர் வருமான வரித்துறையினர்.
வருமான வரித்துறையின் அதிரடிச் சோதனைக்கு இலக்கான இடங்களில் சில...
- விராலிமலை அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரரின் கல்லூரியில் பணிபுரியும் வீரபாண்டியின் வீடு
- சிவகங்கை அதிமுக பிரமுகரின் மனைவி ஆனந்தவல்லி வீடு
- அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி இளங்கோவனின் டி.என்.சி நிறுவனம்
- சிவகாசியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நண்பர் சீனிவாசனுக்கு சொந்தமான இடங்கள்
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் மருமகன் சபரீசன் வீடு
- திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்லூரி
- அண்ணா நகர் சட்டப்பேரவை உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக்கின் வீடு
- சேத்துப்பட்டில் உள்ள கியூ ஸ்கொயர் நிறுவனம்
- சினிமா தயாரிப்பாளர் ஜெயராமனின் எஸ்.என்.ஜே நிறுவனம்
- முன்னாள் அமைச்சரும் கரூர் திமுக வேட்பாளருமான செந்தில்பாலாஜி வீடுகள் மற்றும் அவரது சகோதரர் அசோக் வீடு
- எஸ்.ஆர்.எம்.யூ பொதுச்செயலாளர் கண்ணையாவின் மகன் பிரகாஷுக்கு சொந்தமான பெரம்பூரில் உள்ள இடங்கள்
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்கள்
- மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளரின் நண்பர் வீடு
இப்படி அரசியல் கட்சி நிர்வாகிகள், தனி நபர்கள் என வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைகளின் பட்டியல், 300யும் தாண்டி நீள்கிறது. இதுவரை மொத்தம் 77 கோடி ரூபாய் பணம், 23 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலை ஒப்பிடும்போது, 65 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கம் மற்றும் நகைகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது, 81 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.