சென்னை: ஒரே இணைப்பில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையதள சேவைகள் என மூன்று டிஜிட்டல் சேவைகளை வழங்க மத்திய அரசின் ரூ.1815.31 கோடி நிதி உதவியுடன் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பாரத்நெட் திட்டமானது, அனைத்து ஊராட்சிகளையும் கண்ணாடி இழை கம்பிவடம் (Optical Fibre Cable) கொண்டு இணைத்து அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தினை ரூ.1815.31 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், பணி ஆணை வழங்கிய ஓராண்டு காலத்திற்குள் நான்கு தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு 388 வட்டாரங்களில் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளுக்கு 43 ஆயிரத்து நான்கு கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட கம்பத்தின் வழியாகவும், ஆறாயிரத்து 496 கி.மீ. தூரத்திற்கு நிலத்தடி வழியாகவும் கண்ணாடி இழை கம்பிவட இணைப்பு செயல்படுத்தப்படும்.