திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குநராக இருந்துவரும் நடிகர் தனுஷ், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம், உத்தமபுத்திரன், படிக்காதவன், மாரி, வேலையில்லா பட்டதாரி சமீபத்தில் கர்ணன், அசுரன் ஆகிய படங்களில் நடித்து நட்சத்திர நாயகராக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நடிகர் தனுஷ் குறைந்த படங்களில் அதிக தேசிய விருதுகள் பெற்றுள்ளதாக, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மற்ற நடிகர்களுடன் ஒப்பீடு செய்துவருகின்றனர்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஏதுமறியாத இளைஞராகத் தொடங்கி...
நடிகர் தனுஷ் 'துள்ளுவதோ இளமை' படத்தில் ஏதுமறியாத இளைஞராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது கர்ணனில் நடிப்பு அசுரனாக உருமாறி உள்ளார். தனது ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் ஒருபடி முன்னேற்றம் அடைந்து பிரமாதப்படுத்தி வருகிறார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.
வெறும் 44 படங்களில் மட்டுமே நடித்துள்ள தனுஷ் இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். சமீபத்தில் 'அசுரன்' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷுக்கு அறிவிக்கப்பட்டது.
'அதிக விருது பெற்றது தனுஷ் மட்டுமே'
இந்த நிலையில் குறைந்த திரைப்படங்களில் நடித்து 'அதிக தேசிய விருது பெற்றது தனுஷ் மட்டுமே' என அவரது ரசிகர்கள் மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
அதன்படி 'இந்தியாவில் அதிக முறை தேசிய விருது பெற்றவர் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் மட்டுமே'. அவர் இதுவரை நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். இதுவரை 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து கமல்ஹாசன், மலையாள நடிகர் மம்முட்டி தலா மூன்று தேசிய விருதுகள் பெற்றுள்ளனர். மம்முட்டி 400-க்கும் அதிகமான படங்களில் நடித்து மூன்று தேசிய விருது வாங்கியுள்ளார். கமல்ஹாசன் 230 படங்களில் நடித்து மூன்று தேசிய விருது பெற்றுள்ளார்.
'உண்மையிலேயே தனுஷ் நடிப்பு அசுரன்தான்'
அதேபோன்று மோகன்லால் 346 படங்களில் நடித்து இரண்டு தேசிய விருதுகள் வாங்கி இருக்கிறார். ஆனால், தனுஷ் வெறும் 44 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதற்குள் இரண்டு தேசிய விருதுகளை வாங்கிவிட்டார். 'உண்மையிலேயே தனுஷ் நடிப்பு அசுரன் தான்' என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பெயர் மாற்றத்தால் தேவதைகளின் மாட வெளிச்சம் குறையாது - மாரி செல்வராஜ்'