சென்னை:தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பினை நடத்தும் சுயநிதி கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் அங்கீகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு முன்னர் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும்.
2021-22ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம், அனுமதி பெறுவதற்கு செப்டம்பர் 3ஆம் தேதிவரை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகமும் செப்டம்பர் 3ஆம் தேதிவரை பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பித்த பொறியியல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதி வழங்கியுள்ளது.
கல்லூரி தொடங்க விண்ணப்பம்
பொறியியல் படிப்பில் வேலையின்மை காரணமாக ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும், கரோனா தொற்று பாதிப்பினால் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கல்வி நிறுவனங்கள் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்துவதில் பெரும் சிரமத்தை அனுபவித்து வருவதாக அதன் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இருந்த கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க விரும்பவில்லை எனவும் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன. மேலும் சில கல்லூரிகள் மாணவர்களை நடப்பாண்டில் சேர்ப்பதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை. பொறியியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டு வந்த நிலையில் சமீப ஆண்டுகளாக மூடும் நிலைமை அதிகரித்து வருகிறது.
மாணவர்கள் சேர்க்கை
2020- 21ஆம் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்று பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் 465 அனுமதி பெற்று மாணவர்களை சேர்த்தன. அவற்றில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள் நான்கு, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள் 13, அண்ணா பல்கலைக்கழக மண்டல கல்லூரிகள் மூன்று ஆகிய கல்லூரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டன.
அதேபோல் ஒன்றிய அரசின் பொறியியல் கல்லூரிகள் நான்கு, மாநில அரசு பொறியியல் கல்லூரிகள் 10, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மூன்று ஆகிய 17 கல்வி நிறுவனங்களிலும் கடந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 428 பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் கடந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டன.
பொறியியல் கல்லூரிகள் மூடல்
2020 -21 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைகழகத்தின் 4 வளாக கல்லூரிகள், 62 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்று இயங்கி வந்தன. தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களில் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
2021 -22ஆம் கல்வி ஆண்டில் ஒன்பது கல்லூரிகள் மாணவர்களை சேர்க்க விரும்பவில்லை எனவும் தங்கள் கல்வி நிறுவனங்களை மூடவும் விண்ணப்பம் செய்தது. 5 பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை நடப்பாண்டில் சேர்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆன்லைன் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கவில்லை.
2 பொறியியல் கல்லூரிகள் ஒரே கல்லூரியாக இணைக்கப்பட்டுள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்திற்கு 5 பொறியியல் கல்லூரிகள் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அனுமதி வேண்டும் என விண்ணப்பிக்காமல் இருந்துள்ளன. நடப்பாண்டில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. ஆனால் சென்னை மண்டலத்தில் புதிதாக ஒரு தனியார் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ளன என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சி மூலம் சிறப்பு பயிற்சி மைய மாணவர்களுக்கு பாடம்!