வாராக்கடன் பிரச்சினையைச் சமாளிக்க வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தொடக்கம் முதலே எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மக்கள் பாதிப்பு - வங்கிகள் தனியார் மயமாதல்
சென்னை: வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக இன்று (மார்ச் 15) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, இன்று நாடு முழுவதும், பல்வேறு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமார் எட்டு லட்சம் வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 60 ஆயிரம் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தினால் தமிழ்நாட்டில் வங்கிகள் சேவைகள் கடுமையாகப் பாதிப்படைந்தன. பொதுமக்கள், சிறு, குறு நிறுவனங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபட முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர். நாளையும் (மார்ச் 16) இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாசலம், “தற்போது நடைபெறுவது இரண்டு நாள் அடையாளப் போராட்டம் மட்டுமே. இதற்கு மத்திய அரசின் எதிர்வினையைப் பார்த்துவிட்டுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்ய முடியும்.
மத்திய அரசு இனியும் எங்கள் போராட்டத்திற்குச் செவிமடுக்கவில்லை என்றால், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். தேவைப்பட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்று கூறினார்.