சென்னையில் வங்கியின் நிரந்தர வைப்புத்தொகையிலிருந்த ரூ.1.23 கோடியை கையாடல் செய்த வங்கி மேலாளர் மற்றும் அவரது கணவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை, அண்ணா நகர் பகுதியைச்சேர்ந்த நிர்மலா ராணி என்பவர் பஞ்சாப் சிந்து வங்கி (Punjab & Sind Bank) என்ற தனியார் வங்கியின் ஜார்ஜ் டவுன் மற்றும் அண்ணாசாலை ஆகிய இரு கிளைகளின் மேலாளராக 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், அவர் தான் பணியாற்றிய வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புத்தொகையில் இருந்த ரூ.1 கோடியே 23 லட்சம் பணத்தை வேண்டுகோளின்றி தன்னிச்சையாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து தன்னுடைய பெயரிலுள்ள கர்நாடக வங்கி கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த வங்கியின் மண்டல மேலாளர் கன்வர் லால் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்புப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வங்கியில் தொழிற்கடன் மற்றும் வங்கி உத்தரவாதத்துடன் கடன் கடிதம் பெறும் நிறுவனத்தினர்கள் தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையை வைத்திருந்து, பின்னர் தங்கள் Project முடிந்தவுடன் அந்த வைப்புத் தொகையை திரும்ப பெற்றுக்கொள்வது தெரிய வந்தது.
இதை நன்கு அறிந்து வைத்திருந்த மேலாளர் நிர்மலா ராணி, அதுபோல் இருந்த வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புத்தொகை கணக்கிலிருந்து ரூ.1 கோடியே 23 லட்சம் பணத்தை சிறிது சிறிதாக எடுத்து தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்துள்ளார். பின்னர், தனது வங்கி கணக்கிலிருந்த பணத்தை தனது கணவர் இளங்கோவன் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்து அந்த தொகையை ATM-களில் இருந்து எடுத்து மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசாரின் இந்த விசாரணையின் அடிப்படையில் வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட அண்ணா நகரைச்சேர்ந்த வங்கி மேலாளர் நிர்மலா ராணி(59), அவரது கணவர் இளங்கோவன்(62) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று (செப்.21) மாலை அவர்களது வீட்டில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக தனியார் வங்கி மேலாளர் நிர்மலா ராணியை, ஏற்கெனவே வங்கி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்த குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினரை, காவல்துறை உயர் அலுவலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டு நிறுவனத்திடம் நிதி பெற்று மோசடி; மத்திய குற்றபிரிவு போலீசார் நடவடிக்கை