சென்னை: சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தமிழகத்தில் கிறிஸ்துவ மிஷனரிக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக தஞ்சையில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த ஆண்டு தற்கொலை செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இந்த ஆண்டும் அரசின் ஆதரவுடன் கிறிஸ்துவ மிஷனரிகள் செயல்படுகிறது.
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி அரசு கட்டுப்பாட்டில் உள்ள கன்னியாகுமரி பள்ளியில் மதமாற்ற விவகாரத்தில் மாணவியை மண்டியிட செய்த ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துள்ளது. மத ரீதியிலான செயல்பாடுகளில் கல்வி நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி இருந்தாலும், மிஷனரிகளுக்கு ஆதரவான அரசு அமையும்போதெல்லாம் இந்துக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுகின்றன. தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியில் வரும்போது, ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதி சென்று வரவேற்றதன் மூலம், மிஷனரிகளுக்கு ஆதரவாகவும், கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அரசு செயல்படுவது நிரூபணமாகியுள்ளது.
மாநில அரசு மத விவகாரங்களில் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டியது அவசியம், கன்னியாகுமரி, திருப்பூர் போன்ற இடங்களில் நடந்த மதமாற்ற நடவடிக்கைளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மத மாற்றத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:நீதிமன்றத்தில் தேதி முத்திரையைத் திருடிய முன்னாள் உதவியாளர் கைது