தற்கொலைகளைத் தடுக்கவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை:அரசு பதில் மனு - தமிழ்நாடு அரசின் தற்போதைய செய்திகள்
19:29 January 20
ஆன்லைன் விளையாட்டுகளால் நிகழ்ந்த தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கிலேயே, ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தன.
இந்த வழக்குகளுக்குப் பதிலளித்து தமிழ்நாடு அரசு சார்பில் உள்துறை துணைச்செயலாளர் உதயபாஸ்கர் தாக்கல் செய்த பதில்மனுவில், தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதைப் போல, தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அளித்த ஆலோசனையை ஏற்று, இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அதில் இருவர் சிறார்கள் என்றும்; குழந்தைகள், தங்கள் பெற்றோரின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்பதாகவும், அதனால் பெற்றோருக்கு ஏற்படும் பண இழப்பைத் தடுக்கவும், தற்கொலைகளை தடுக்கவுமே இந்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரம்மி விளையாட்டு திறமைக்கானது என்றாலும் பந்தயம் வைத்து விளையாடினால் அது குற்றமாகும் என்றும், பணம் வைத்து விளையாடுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சூதாட்டத்தை வர்த்தகமாக கருத முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தாமதமாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதற்கு விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: பேரறிவாளனின் விடுதலை வழக்கு: நாளைக்கு ஒத்தி வைப்பு