டெல்லி: 2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் குறித்த அறிவிப்புகள் இன்று (ஆக.24) அறிவிக்கப்பட்டன.
அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்டப் பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கான நாவல், சிறுகதை, அபுனைவு (புனைவில்லாத), புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது "மல்லிகாவின் வீடு" நூலுக்காக ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி, பத்திரிகைத்துறையில் 27 ஆண்டுகள் கால அனுபவம் கொண்டர். இவர் பேசும் ஓவியம், நீ உன்னை அறிந்தால், பரிசலில் ஒரு படகு, மல்லிகாவின் வீடு உள்ளிட்ட சிறுவர்களுக்கான சிறுகதை நூல்களை எழுதியுள்ளார். பிரபலமானவர்களின் வெற்றி ரகசியம் என்ற நேர்காணல் நூல், மனமே மலர்ச்சி கொள் என்ற தன்னம்பிக்கை நூல் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.