சின்னசேலம் தொகுதியில், கடந்த 1991-96ஆம் ஆண்டுகளில் அதிமுக எம்எல்ஏவாக இருந்த பரமசிவம் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடுத்தது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்திற்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து! - அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்திற்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்திற்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்திருந்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த எம்பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்துக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில், “கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று(ஏப்.29) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் 22 லட்சத்து 58 ஆயிரத்து 746 ரூபாய் சொத்து குவித்துள்ளதாகக் கூறிய நிலையில், 33 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி முடிவுக்கு வந்தது குற்றப் பத்திரிகைக்கு முரணானது.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வரப்பட்டது என விசாரணை நீதிமன்றம் தெளிவாகத் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்தார். மேலும் சொத்துக்களை மதிப்பீடு செய்ததில் தவறுகள் உள்ளதாகவும், வழக்கு விசாரணையின் போது மனுதாரருக்கு அவர் தரப்பு வாதங்களை முன் வைக்க போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், அவருக்கு 72 வயதாகி விட்டதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும், முன்னாள் எம்எல்ஏ தரப்பில் வாதிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரியாஸ், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசமும், ஜாமீன் வழங்க ஆட்சேபமும் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏ பரமசிவத்துக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்
மேலும், அபராத தொகை 33 லட்சத்து 4 ஆயிரத்தில், 7.5 லட்சம் ரூபாயை ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.