சென்னை திருமுல்லைவாயில் அந்தோணி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும், செந்தமிழ் செல்வி என்பவருக்கும் திருமணமாகி இரு பிள்ளைகள் பிறந்தனர். இக்குடும்பம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஜூன் 27ஆம் தேதி வீட்டில் ஆடிப்பாடிக் கொண்டிருந்த ராஜேந்திரனின் 4 வயது மகள் திடீரென காணமல் போயுள்ளார்.
அருகில் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர், வீட்டைச் சுற்றி சிறுமியைத் தேடி பார்த்தபோது, அங்கிருந்த குளியலறை ஒன்றில் சிறுமிசடலமாகக் கிடந்துள்ளார்.
பின்னர், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருப்பதைக் கண்டறிந்த காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 60 வயதான ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்குச் சென்ற அவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சிறுமி வீட்டில் சொல்லி விடுவார் என்ற அச்சத்தில் அவரை இரக்கமின்றி கொலை செய்து, உடலை குளியலறை பக்கெட்டில் வைத்துவிட்டு யாருக்கும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார் அந்த 60 வயது மீனாட்சி சுந்தரம்.
இதையடுத்து மீனாட்சி சுந்தரத்தை கைது செய்த காவல் துறையினர், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியையும் கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மீனாட்சி சுந்தரத்திற்கு அவரின் மனைவிக்கும் தற்போது ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சிறுமியின் பெற்றோர், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சிறுமியின் தந்தை, ’எனக்கு தாய் தந்தை இல்லை. எனது மனைவிக்கு தாய் இல்லை. நாங்கள் இருவரும் பெறாத அன்பை எங்களுடைய மகளுக்கு வழங்கி ஆசையாய் வளர்த்து வந்தோம். ஆனால் கனவில் கூட நினைக்காத ஒன்று என் மகளுக்கு நடந்துவிட்டது. என் மகள் இறப்பிற்குப் பின், எனக்கும் எனது மனைவிக்கும் ஆறுதலாக இருந்தது காவல் துறை. கொலை செய்த நபருக்கு எப்படியாவது தண்டனை கிடைத்துவிடும் என்று நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் ஐந்தே மாதத்தில் அவர்களிடமுள்ள பண பலத்தால் ஜாமினில் வெளிவரவுள்ளனர். இது எங்கள் துக்கத்தை மேலும் அதிகரிக்கும் செயலாக உள்ளது.
குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் கண்ணீர் என் மகள் இறந்த பிறகு நாங்களும் தற்கொலை செய்து கொள்ளலாம் என இருந்தோம். ஆனால் என் மகனை கருத்தில்கொண்டு வாழ்ந்து வந்தோம். குற்றவாளிக்கு எப்படியாவது தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யும் நபர்களுக்கு இந்த தண்டனை முன்மாதிரியாக அமைந்துவிடும் என்றும் நம்பியிருந்தோம்.
என் மகள் உயிரோடு இருந்தபோது, உறுதுணையாக இருந்த அனைவரும் தற்போது கொலையாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் எனக்கு உதவ வேண்டும். குற்றவாளிகள் தங்கள் தவறை உணரவேண்டும். எங்களது மகள், நாங்கள் வந்து அந்த கொடியவனிடமிருந்து எப்படியாவது காப்பாற்றி விடுவோம் என நம்பியிருப்பாள். ஆனால் காப்பாற்ற முடியாத சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்... அது எங்கள் தலைவிதி’ என கண்ணீர் மல்க பேசினார்.
இதையும் படிங்க: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; தனியார் காப்பக நிறுவனரின் ஜாமின் தள்ளுபடி!