சென்னை:சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் இன்று(ஜூலை 13) காலை 11 மணிக்கு 184 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்டு சென்றது. விமானம் அந்தமானை நெருங்கியபோது அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் விமானம் அந்தமானில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக, வானிலேயே வட்டமடித்துக் கொண்டு இருந்தது.
ஆனாலும் வானிலை சீரடையவில்லை. இதையடுத்து திரும்பி வரும்படி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அந்த விமானத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விமானம் மீண்டும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து தரை இறங்கியது.
அந்தமானில் வானிலை மோசமாகவே இருந்ததால், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகள் விமான நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அந்தமானில் மோசமான வானிலை இருப்பதால், பயணிகளின் பாதுகாப்புக்கு கருதியே சேவை ரத்து செய்யப்பட்டது என்றும், நாளை காலை மீண்டும் விமானம் அந்தமானுக்கு புறப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விருப்பப்பட்ட பயணிகள் நாளை காலை பயணிக்கலாம், மற்ற பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:விமானத்தில் ரூ. 41.83 லட்சம் மதிப்புடைய தங்கம் கடத்தல் - திருச்சி பயணி கைது