கடந்த 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கான தீர்ப்பை வழங்கியது. அது ஒரு சார்பாக அமைந்துள்ளதாகவும் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டதாகவும் பாபர் மசூதி தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதி எனக் கூறி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி பேருந்து நிலையம் முன்பு பாபர் மசூதி தீர்ப்பைக் கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் திப்புசுல்தான் முன்னிலை விகித்தார். இவர்களுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு தென்காசி நகருக்குள் நுழையும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர எல்லைக்குள் நுழைய முடியாதபடி, அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
விருதுநகர்:
அதில் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தஞ்சை:
அதிராம்பட்டினத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஊர்லமாக கோஷம் எழுப்பியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:
அறிவொளி பூங்கா அருகே அனுமதியின்றி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 300க்கும் அதிகமான நபர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு:
கருங்கல்பாளையத்தில் பாபர் மசூதி வழக்கை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கொட்டும் மழையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர்:
கூத்தாநல்லூரில் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பாஜக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கங்களை எழுப்பி, உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.