சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. 27 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றாலும்கூட அது அனைத்து மக்களையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது. தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.
அயோத்தியில் ராமர் கோயில் இருந்ததாக வரலாறு இல்லை.அதை இடித்துதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரமும் இல்லை. வால்மீகி ராமாயணத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார். அதனால் அது வெகுஜன மக்களிடம் போய் சேரவில்லை. அதை வெகுஜன மக்களிடம் கொண்டு சென்றவர் துளசிதாசர். முகலாய சக்கரவர்த்தியான அக்பர் துளசிதாசரை அழைத்து அவரை புகழ்ந்து கவிதை பாடியுள்ளார்.
மேலும் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு துளசிதாசர் அயோத்தியில் அனுமன் கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதன்பிறகு அக்பர் அனுமன் கோயிலுக்கு நிலத்தை ஒதுக்கியயுள்ளார். இன்றும் அந்தக் கோயில் துளசிதாசர் பெயரில் அங்கு இருக்கிறது. அயோத்தியில் ராமர் வாழ்ந்திருந்தால் அதே இடத்தை துளசிதாசர் ஏன் அக்பரிடத்தில் கேட்கவில்லை.
அவர் மட்டுமல்ல அவருக்கு பின்னால் வந்த அறிஞர்கள் கபீர், குரு நானக் போன்றவர்களும் அதை கேட்கவில்லை. பின்னர் பிரிட்டிஷ் அரசாங்கம் வந்தபோதும் ஆர்ய சமாஜமும் அந்த இடத்தை கேட்கவில்லை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துகின்ற விவேகானந்தரும் அவருடைய குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.
அதன்பிறகு இந்தக் கோரிக்கையை வலியுத்தியது பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்தான். அங்கு ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது அமைப்பின் நோக்கமே தவிர அது வெகுஜன மக்களின் நோக்கமல்ல. மக்களின் வழிபாட்டு தலங்களை, நம்பிக்கைகளை சிதைத்து எதையும் நிலைநிறுத்த வேண்டாம் என்று தன் மகனுக்கு பாபர் உயில் எழுதினார்.