தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அடுத்தடுத்து வேலை நாள்களை குறைக்கும் சரக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள்

சென்னை: தேவை குறைந்ததையடுத்து சரக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் வேலை நாள்களை குறைத்துவருகின்றன.

automobile slow down

By

Published : Sep 28, 2019, 11:51 AM IST

சரக்கு வாகனங்களுக்கான தேவை குறைந்து வருவதையடுத்து அந்நிறுவனங்கள் தொடர்ச்சியாக வேலை இல்லாத நாள்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐந்து நாள்கள் வேலை இல்லாத நாள்களாக அறிவித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 28, 30 அக்டோபர் 1, 8, 9ஆம் தேதிகளில் சென்னைக்கு அருகில் உள்ள எண்ணூர் தொழிற்சாலை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் செப்டம்பர் மாதத்தின் 30ஆம் தேதிவரை ஆறு நாள்கள் வேலையில்லாத நாள்களாக அறிவித்துள்ளனர். இதனைக் கணக்கில் கொண்டு ஆறாவது வேலையில்லா நாள் என்ற அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனவும் மற்ற நாள்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்து தொழிற்சங்கத்துடன் பேசி முடிவு எடுக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆகஸ்ட் இறுதி மற்றும் செப்டம்பர் தொடக்கத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூர், ஒசூர் உள்ளிட்ட தனது பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை இல்லாத நாள்களை அறிவித்தது. அதேபோல் ஆட்டோ மொபைல் உதிரிபாக நிறுவனங்களிலும் வேலை நாள்கள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலை தொடர்ந்தால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலை ஏற்படும் என்றும் பொதுவாக சரக்கு வாகன விற்பனை சரிந்தால் அது பொருளாதாரத்தில் மந்த நிலை இருப்பதற்கான அறிகுறி என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலில் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. இது சரக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்திடம் கேள்வி எழுப்பியபோது, "மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் வேலையிழப்பு குறைவாக உள்ளது" என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில்ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட டெய்ம்லர் (Daimler) நிறுவனம் இந்த மாதம் மூன்று வேலை இல்லாத நாள்களும் அக்டோபர் மாதம் மூன்று வேலையில்லா நாள்களும் இருக்கும் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:'துணி நூல் ஏற்றுமதியை ஊக்குவிக்க சில சலுகைகள் தேவை' - ஐவுளி கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details