சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தொழிற்சங்க ஆட்டோ பிரிவு மாநிலத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்க நிர்வாகி அமெரிக்கை நாராயணன் ஆகியோர், ‘பெட்ரோல், டீசல், வாகன எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஓலா, ஊபர் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களை தடை செய்து, இத்தொழிலை அரசே ஏற்று நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 8ஆம் தேதி தமிழ்நாட்டு, புதுவையில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.
புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தில் அதிக அளவிலான அபராதம் விதிக்கப்படுவதால், மோட்டர் வாகனத் தொழிலாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இச்சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. மோட்டர் வாகன சட்டப்படி அனுமதி இல்லாத இருசக்கர வாகன டாக்சிக்கு நீதிமன்றமே தடை விதித்த போதும், அவை செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு அவ்வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்ளுக்கு காப்பீடும் கிடையாது. மக்களுக்கு பாதுகாப்பில்லாத இருசக்கர வாகன டாக்சியை தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது அவர்களுக்கு மஞ்சள் நிற பதிவு எண் தகடு (நம்பர் பிளேட்) மற்றும் சீருடை வழங்க வேண்டும்.