சென்னை:1988ஆம் ஆண்டு மே மாதம் மந்தைவெளியைச் சேர்ந்த மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகியோர் காணாமல் போனதாக அவர்கள் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அப்போது போலீசாருக்கே தெரியாது... அது தமிழ்நாட்டை உலுக்கும் வழக்கென்று..!
சாதாரண வழக்கைப்போல போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, பெண்கள் மீது மோகம் கொண்ட மூவரும் அடிக்கடி பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் சென்று வருவது தெரியவந்துள்ளது. அப்போது பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த ஆட்டோ சங்கரின் வீட்டிற்கு அவர்கள் சென்றது போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் ஆட்டோ சங்கர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், போலீசாரே நெருங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் ஆட்டோ சங்கர் இருந்ததால், அவரது நண்பர்களான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது மூவரில் பாபு அப்ரூவராக மாறி, பாலியலில் ஈடுபட்ட பின் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டதால் மோகன், சம்பத், கோவிந்தராஜ் ஆகியோரை ஆட்டோ சங்கருடன் சேர்ந்து, கொலை செய்து புதைத்திருப்பதாகக் கூறியுள்ளான்.
சுவற்றில் மறைக்கப்பட்டு இருந்த சடலங்கள்: இதனையடுத்து உடனடியாக பாபு கூறிய இடத்திற்குச்சென்று பள்ளம் தோண்டியபோது எதுவும் சிக்கவில்லை. பின்னர் சுவரை உடைக்கும்போது அழுகிய நிலையில் நான்கு எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்ட போலீசார் திகைத்தனர். அப்போதுதான் இடைத்தரகரான சுடலை என்பவனும் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதும் போலீசாருக்கு விசாரணை மூலம் தெரியவந்தது. தமிழ்நாட்டையே இச்சம்பவம் உலுக்கிய நிலையில், ஆட்டோ சங்கர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
யார் இந்த ஆட்டோ சங்கர்? சாதாரண ஆட்டோ ஓட்டுநராக இருந்த கௌரி சங்கர் அசாதாரண வளர்ச்சியடைந்து அரசியல்வாதிகள் வரை கையில் வைத்திருந்தது எப்படி? போன்ற பல கேள்விகள் போலீசாரை வியப்பில் ஆழ்த்தியது.
கெளரி சங்கர் முதல் ஆட்டோ சங்கர் வரை:சென்னை திருவான்மியூர் பகுதியைச்சேர்ந்த கௌரி சங்கர் சிறு வயது முதலே பஞ்சம், பட்டினி என வாழ்ந்து வந்ததால், சிறுவயதிலேயே சொகுசாக வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் உதயமானது. அப்போது, போதுமான பணம் இல்லாததால் பி.யூசி(அன்றைய +2) வரை படித்துவிட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டி வந்துள்ளார், கௌரி சங்கர்.
அதன்மூலம் கௌரி சங்கர் ஆட்டோ சங்கராக மாறிய நிலையில், ஜெகதீஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தந்தையானார். ஒருமுறை குழந்தைக்குப் பால் வாங்கப்பணம் இல்லாததால் கடைக்குச்சென்று கடன் கேட்டபோது, கடைக்காரரிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீசாரிடம் சங்கர் சிக்கியுள்ளார். இதனால் கடுப்பான ஆட்டோ சங்கர், மீண்டும் அதே கடையில் இருந்த பொருட்களை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டபோது, கடைக்காரர் இலவசமாக பால் பாக்கெட்டை எடுத்துக்கொடுத்துள்ளார்.
தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய நாள் ஆட்டோ சங்கர் பயத்தினால்தான் பணம் கிடைக்கும்:அந்த நொடி பயத்தினால் தான் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உணர்ந்த ஆட்டோ சங்கர், அதன்பின் சட்டவிரோதச்செயல்களில் ஈடுபடத்தொடங்கினார். ஆட்டோவில் போதுமான வருமானம் கிடைக்காததால், 1980களின் தொடக்கத்தில் கள்ளச்சாராயத்தொழில் கொடிகட்டி பறந்ததால் ஆட்டோவில் கள்ளச்சாராயத்தை கடத்திக்கொண்டு, திருவான்மியூரில் இருந்து கோவளம் வரை சென்று கைமாற்றத்தொடங்கிய சங்கருக்கு கமிஷனாக அதிகமான வருமானம் கிடைத்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் காவல்துறையினருடனும் சங்கருக்கு நட்பு ஏற்பட்டதால் கள்ளச்சாராயத்தை கொண்டு செல்வதைவிட, காய்ச்சி விற்பனை செய்தால் அதிக அளவு சம்பாதிக்கலாம் என நினைத்து ஆட்டோ சங்கர் அடுத்ததாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். கள்ளச்சாராயத்தொழிலில் எதிர்த்து நின்ற அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தையே ஆட்டோ சங்கர் உருவாக்கினார்.
பாலியல் தொழில் தொடக்கம்: 24 மணி நேரமும் பணம் புரண்டோடியதால் ஆட்டோ சங்கருக்கு பெண்கள் மீதான ஈர்ப்பு ஏற்பட்டு, பின் பாலியல் தொழில் செய்யும் பல பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவு, பாலியல் தொழிலிலும் சங்கரை ஈடுபட வைத்தது. குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை பாலியலுக்காக வரவழைத்த சங்கர், கள்ளச்சாராயம் கடத்தும்போது காவல் துறையின் கெடுபிடிக்கு முடிவுகட்ட, முக்கியப் பிரமுகர்களுக்கு தன்னிடம் உள்ள பெண்களை அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் அவ்வாறு அனுப்பும் பெண்களை சில முக்கியப் பிரமுகர்களுடன் புகைப்படங்கள் எடுக்கவைத்து, அதைக் காட்டி அவர்களை மிரட்டி பணப்பறிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆட்டோ சங்கர் அந்த காலத்தில் உச்சத்தில் இருந்த பிரபல சினிமா நடிகைகளைக்கூட, மிரட்டி முக்கியப்பிரமுகர்களுக்கு விருந்தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
பெண்களுடன் உல்லாசம்:கள்ளச்சாராயம், பாலியல் தொழில், பெரும்புள்ளிகளின் பழக்கம் என உச்சத்தில் இருந்த ஆட்டோ சங்கர், பாலியல் தொழிலுக்கு அழைத்து வரப்பட்ட சுமதி, சுந்தரி, லலிதா ஆகியோரை அடுத்தடுத்து திருமணம் செய்துகொண்டதுடன் தான் நினைத்த அனைத்துப்பெண்களுடனும் சுகபோகவாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.
திருமணம் செய்துகொண்ட மனைவிகளின் பெயர்களை ஆட்டோ சங்கர், தனது உடலில் பச்சை குத்துவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் தரவுகள் கூறுகின்றன. ஆட்டோ சங்கர் திருமணம் செய்துகொண்ட மனைவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநரும், இடைத்தரகருமான சுடலை தொடர்ந்து, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்ததால், முதலில் சுடலையை ஆட்டோ சங்கர் எச்சரித்துள்ளார்.
முதல் கொலை:சில நாட்களுக்குப் பின் ஆட்டோ சங்கரின் ஆசை காதலியும், மனைவியுமான லலிதா அவனது முரட்டு நடவடிக்கைகளால், சங்கரை பிரிந்துசென்றதுடன், அவனுக்குத்தெரியாமல் சுடலையுடன் திருமணத்தைத்தாண்டிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ஆட்டோ சங்கர், சுடலையை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொடூரமாக கொலை செய்தார்.
அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத ஆட்டோ சங்கர் தனது மனைவியான லலிதாவையும் கொன்று திருவான்மியூர், பெரியார் நகர் அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள வீட்டின் சமையலறைக்குக் கீழே நிர்வாணமாக புதைத்து வைத்தது பின்னர் போலீசார் விசாரணையில் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் தொடர்ச்சியாக சுடலையைத் தேடி வந்த ரவியையும் சங்கர் கொலை செய்து புதைத்தார். இவ்வாறு பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக 6 பேரை ஆட்டோ சங்கர் கொலை செய்திருந்ததைக் கண்டுபிடித்த போலீசார் மிரண்டு போனார்கள்.
அந்தரங்க டைரியில் சிக்கிய தடயங்கள்:அதனைத்தொடர்ந்து சங்கரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையினருக்கு சங்கர் பணம் வழங்கிய விவரங்கள் குறித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அரசியல் பிரமுகர்களின் அந்தரங்கப் புகைப்படங்களும், பல கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் கட்டுக்கட்டான பணமும் போலீசாரிடம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலைக் குற்றங்கள் தொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சங்கர் உள்ளிட்ட 10 பேர் மீது 1,100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆள்கடத்தல், சாட்சியங்களை மறைத்தல், கலவரம் செய்தல், சதி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், செங்கல்பட்டு கூடுதல் அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
சிறையிலிருந்து தப்பி ஓடிய சங்கர்:9 நடுவர் மன்ற நீதிபதிகள், 5 காவல் ஆய்வாளர்கள், நடிகை புவனி உள்பட 134 பேர் சங்கருக்கு எதிராக அப்போது சாட்சியளித்தனர். வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியிருந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்த ஆட்டோ சங்கர் உள்ளிட்ட 5 பேர் சென்னை மத்திய சிறையில் இருந்து 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தப்பியோடினர்.
ஆட்டோ சங்கருக்கு போலீஸ் தொடர்பு இருப்பதால், சிறைத்துறையினர் தப்பிக்க உதவியிருப்பதாக செய்திகள் பரவியது. நீதிமன்ற விசாரணையிலும் இந்த வாதம் எடுத்துக்கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சிறையில் கணபதி என்பனை சந்திக்க வரும் தேவி என்ற பெண்ணுடன் ஆட்டோ சங்கருக்குப் பழக்கம் ஏற்பட்டு, சிறையிலும் தனது லீலைகளை ஆரம்பித்த ஆட்டோ சங்கர் தேவியையும் மோதிரம் மாற்றித்திருமணம் செய்து கொண்டுள்ளான்.
இந்த விஷயம் அறிந்த முதல் மனைவியான ஜெகதீஸ்வரி சிறையிலேயே தேவியின் முடியைப் பிடித்து இழுத்து சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னாளில் தேவி உதவியுடன் சங்கர் மற்றும் கூட்டாளிகள் சிறையிலிருந்து தப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர். அதனைத்தொடர்ந்து தலைமறைவான ஆட்டோ சங்கர் மற்றும் கூட்டாளிகளைப் பிடிக்க சென்னை காவல்துறை, சி.பி.சி.ஐ.டி மற்றும் சிறைத்துறையினர் மூன்று குழுக்களாகப் பிரிந்து தீவிரமாகத் தேடி வந்தனர்.
ஆட்டோ சங்கருக்கு உதவியவர்கள்:ஆட்டோ சங்கரை சிறையில் இருந்து தப்பிக்க வைத்த வழக்கறிஞர் ராஜா, சுண்டல் குமார் ஆகியோரைக் கைது செய்த போலீசார், அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஒடிசா மாநிலம் ரூகேர் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த ஆட்டோ சங்கரை போலீசார் கைது செய்தனர். சுமார் 12 நாட்களுக்குப் பின் ஆட்டோ சங்கரை கைது செய்த போலீசார் அவனை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து பின், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
பின் 1991ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி ஆட்டோ சங்கர் தொடர்பான சீரியல் கொலை உள்ளிட்ட வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முன்னதாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சங்கர் உள்ளிட்ட 8 பேரும், தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றே அப்போதும் தெரிவித்துள்ளனர். ஆனால், 8 பேர் மீதும் சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை வழங்கியது.
தூக்குத் தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு:இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்யாத கொலைக்கு, தங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும், நிரபராதியான தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரி மேல்முறையீடு செய்தனர். பின்னர் மேல்முறையீட்டு வழக்கிலும் போலீசார் கொலையானவர்களின் மண்டையோடுகளை தடயவியல் துறைக்கு அனுப்பி, ’சூப்பர் இம்போசிஷன்’ முறையில் ஆய்வுக்கு உட்படுத்தி கொலைகளை நீதிமன்றத்தில் உறுதி செய்தனர்.
அதன் விளைவாக ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகிய மூவரின் தூக்கு உறுதி செய்யப்பட்டது. தண்டனை பெற்றதில் பழனி, பரமசிவம் ஆகியோரின் ஆயுள் தண்டனை மட்டும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்தும், சங்கர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். அதில் வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த சினிமாக்களின் பாதிப்பால்தான் இந்த கொலைகள் நடந்ததாகவும், இதற்கு சினிமா தயாரிப்பாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என ஒரு பரபரப்பு வாதத்தை ஆட்டோ சங்கர் தரப்பு முன்வைத்தது. இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சங்கர், எல்டின் ஆகிய இருவரின் தூக்கை உறுதி செய்தனர்.
குடியரசுத் தலைவரிடம் கருணை மனு:அதன் பிறகு தூக்குத்தண்டனையை ரத்து செய்ய இறுதி முயற்சியாக, அன்றைய குடியரசுத்தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்கு ஆட்டோ சங்கர் மூலம் கருணை மனு அனுப்பப்பட்டு அதுவும் நிராகரிக்கப்பட்டது. அதன் பின் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி ஆட்டோ சங்கரை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிறையிலிருந்த ஆட்டோ சங்கர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, கடைசி வரை தூக்கு தண்டனை ரத்தாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தான்.
தூக்குத் தண்டனை நாளான 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி போலீசார் சங்கரை எழுப்பியவுடன் "போன் வந்துச்சா சார்" என கேட்டு, எந்த வித பயமும் இல்லாமல் சங்கர் வந்ததாக கூறப்படுகிறது. கடைசி ஆசை பற்றி கேட்டபோது "ஒண்ணுமில்ல" எனக் கூறிய சங்கர், அவனுக்கு தூக்கிலிட கழுத்தில் கயிற்றை மாட்டியதும் "ஒரு நிமிஷம் இருங்க சார்" என கதறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், நேரத்தை கருத்தில்கொண்டு ஆட்டோ சங்கரை சிறைத்துறையினர் தூக்கிலிட்டனர்.
ஆட்டோ சங்கர் இறந்தவுடன் அவனது உடல் முதல் மனைவியான ஜெகதீஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டது. தவறான பாதையில் பயணித்து பணத்தாசை மற்றும் பெண்ணாசையால் அழிந்துபோன ஆட்டோ சங்கரின் வாழ்க்கை 27ஆண்டுகள் கடந்தும், தற்போதைய தலைமுறைக்கு பாடம் கற்பிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க:கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது