சென்னை சேப்பாக்கத்திலுள்ள தனியார் விடுதியில், பிப்ரவரி 10ஆம் தேதி கொல்கத்தா சைபர் கிரைம் காவல் துரையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று கூறி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேரை அவர்கள் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். கொல்கத்தா காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர்கள் நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடி, பண மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மேலும் ஸ்கிம்மர், ரகசிய படக்கருவிகளை வைத்து வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடித்திருப்பதும் அம்பலமானது. இந்த வழக்கில் பிடிபட்டவர்களில் பாஸ்கர் என்ற முக்கிய குற்றவாளி, விசாரணையின்போது திருவல்லிக்கேணியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து திருவெல்லிக்கேணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.