தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஏடிஎம் கொள்ளை... கும்பல் தலைவனை குண்டுகட்டாகத் தூக்கிய காவல் படை: அந்த டிக்... டிக்... டிக்... நிமிடங்கள்! - atm robbery case

தமிழ்நாட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவது நபராக கொள்ளைக் கும்பலின் தலைவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது
ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது

By

Published : Jul 2, 2021, 4:54 PM IST

Updated : Jul 2, 2021, 5:19 PM IST

ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்த 75 விழுக்காட்டினர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதையே தங்களது தொழிலாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் மட்டும் ஒன்பது இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், சென்னை காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. கொள்ளையர்கள் ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தனிப்படை காவல் துறையினர் உறுதிசெய்தனர்.

கொள்ளையர்கள் கைது

கொள்ளையர்கள் ஜூன் 16 முதல் 18ஆம் தேதிவரை திருவண்ணாமலை, சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் 21 ஏடிஎம்களிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் வரை சுருட்டிவிட்டு, ஜூன் 19ஆம் தேதி விமான மார்க்கமாக ஹரியானாவிலுள்ள தங்கள் கூடாரமான மேவாட் பகுதிக்குச் சென்று தலைமறைவாகினர்.

பின்னர் தியாகராய நகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையிலான தனிப்படையினர் ஹரியானா மாநிலம் மேவாட் சென்று முகாமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அமீர் அர்ஷ், வீரேந்திர ராவத், நசீம் உசைன் ஆகிய மூன்று பேரை கைதுசெய்து நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 1) கொள்ளைக் கும்பலை வழிநடத்திய தலைவரான சவுகத் அலியை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இந்நிலையில் கொள்ளையர்களைக் கையாள தனிப்படையினர் பயன்படுத்திய முயற்சிகள், யுக்திகள் என்னென்ன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்துப் பார்க்கலாம்...

சுற்றிவளைத்த காவல் துறை; ஆனாலும் பயனில்லை

தனிப்படையினரின் ஒரு குழு கிடைக்கப்பெற்ற சிசிடிவி பதிவுகளை வைத்து கொள்ளையர்களைத் தேடியதோடு அவர்கள் வந்த வாகன எண்ணை வைத்து கோடம்பாக்கத்தில் உள்ள வாடகைக்கு இருசக்கர வாகனங்களை கொடுக்கும் தனியார் நிறுவனத்தை அணுகி கொள்ளையர்களின் அடையாள அட்டையைக் கண்டறிந்தனர்.

அதேபோல அவர்கள் அரும்பாக்கத்தில் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று அவர்கள் அளித்திருந்த முகவரியையும் அறிந்துகொண்டனர். மற்றொரு குழு அவர்கள் பயன்படுத்திய ஏடிஎம் அட்டையின் வங்கிக் கணக்கிலுள்ள முகவரியைக் கைப்பற்றினர். இவ்விரு துப்புகளும் ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையுமே குறிப்பிட்டுக்காட்டின. இதையடுத்து கொள்ளையர்கள் ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தனிப்படை காவல் துறையினர் உறுதிசெய்தனர்.

அதன் பின்னரே தியாகராய நகர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் மேவாட்டுக்கு விரைந்தனர். கொள்ளையர்களின் அடையாளம் தெரிந்திருந்த நிலையில் அங்குள்ள ஹரியானா சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் தனிப்படையினரும் சேர்ந்து சுமார் 200 காவலர்கள் கொள்ளைக் கூட்டத்தின் கூடாரமான மேவாட் பகுதியைச் சுற்றிவளைத்து சோதனையிட முயன்றனர்.

ஆனால் இரண்டு முறை முயன்றும் அப்பகுதிக்குள் நுழைய முடியாமல் காவல் துறையினரின் அதிரடித் தாக்குதல் தோல்வியில் முடிந்தது.

ஜூன் 23இல் சிக்கிய அமீர் அர்ஷ்

பின்னர் நேரடித் தாக்குதலில் பயனில்லை என்றுணர்ந்த தனிப்படை காவல் துறையினர் அப்பகுதி முழுவதையும் ரகசியக் கண்காணிப்பிற்குள் கொண்டுவந்து, குற்றவாளிகள் அப்பகுதியை விட்டு வெளியே வரக் காத்திருந்தனர்.

அந்த நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கொள்ளையர்களுள் ஒருவரான எம்.காம் பட்டதாரி அமீர் அர்ஷ் அவரது கூடாரத்தை விட்டு வெளியே வந்திருப்பது தனிப்படையினருக்குத் தெரியவர அவரைச் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சவுகத் அலி, சஹதப் கான் ஆகிய இருவரின் தலைமையின்கீழ் நான்கு குழுக்கள் தமிழ்நாட்டில் களமிறங்கி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும், பணத்தை எடுத்தவுடன் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அதைப் பிரித்து அனுப்பிவிடுவதும் தெரியவந்தது. அமீர் அர்ஷ் தனது கூட்டாளியுடன் இணைந்து ஏழு இடங்களில் சுமார் 18 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்ததை காவல் துறையினர் வாக்குமூலமாகப் பெற்றனர்.

ஜூன் 26இல் சிக்கிய வீரேந்தர் ராவத்

அதனடிப்படையிலேயே தனிப்படையினர் வீரேந்தர் ராவத்தை தங்களது இலக்காக்கினர். ஆனால் அமீர் சிக்கிய நிலையில் வீரேந்தர் உஷாராகி தனது செல்போனை அணைத்து வைத்துவிட்டு கூடாரத்தை விட்டு வெளியே வராமல் இருந்துவந்துள்ளார்.

இதனையடுத்து புதிய திட்டம் தீட்டிய தனிப்படையினர் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் தனிப்படையைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு திரும்பிவிட்டதாக ஒரு பிம்பத்தை அப்பகுதியில் உருவாக்கி அச்செய்தியை பரவச் செய்து வீரேந்தர் வருகைக்காகக் காத்திருந்தனர்.

இதனை நம்பிய வீரேந்தர் ராவத் இரண்டு நாள்களுக்குப் பின் புது சிம்மை வாங்கி தனது பழைய சிம்மை மாற்றுவதற்கு முன் ஒருமுறை செல்போனை ஆன் செய்துள்ளார். அத்தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த தனிப்படையினர் வீரேந்தர் இருந்த பகுதியைக் கண்டறிந்து உடனடியாக அவரைச் சுற்றிவளைத்து ஜூன் 26ஆம் தேதி கைதுசெய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அமீர் அர்ஷுக்கும், வீரேந்தர் ராவத்துக்கும் - மேலும் இரு கொள்ளையர்களுக்கும் சஹதப் கான்தான் தலைவராகச் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. நசீம் உசேன் உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய இரு குழுவினருக்கு சவுகத் அலியே தலைவர் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து வாக்குமூலத்தில், "என்னை இருசக்கர வாகனம் ஓட்டவே அமீர் அர்ஷ் அழைத்துவந்தார். அங்குவந்த பின்னரே அவர் கொள்ளையடிக்க வந்தது எனக்குத் தெரியும். எனக்கும் நான்கு லட்ச ரூபாய் பங்கு தருவதாகக் கூறியதால், நான் கொள்ளைக்கு உதவினேன். தற்போது பணம் ஏதும் இல்லை" என வீரேந்தர் விரக்தியுடன் தெரிவித்தார்.

கும்பல் தலைவர் சவுகத் அலி கைது

அதனையடுத்து இதே பாணியில் நசீம் உசேனையும் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி, அவர் மூலம் நேற்று (ஜூலை 1) அவருடன் வந்த கொள்ளையர்களின் குழுவுக்குத் தலைவராகச் செயல்பட்ட சவுகத் அலியையும் கைதுசெய்துள்ளனர்.

ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட மூவரையும் சென்னை அழைத்துவந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு குழுக்களுக்குத் தலைராகச் செயல்பட்ட சவுகத் அலியும் விரைவில் சென்னை அழைத்துவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள ஐந்து கொள்ளையர்கள், மற்றொரு குழுவின் தலைவர் ஆகியோரின் அடையாளங்கள் தெரிந்துவிட்ட நிலையில், அங்கு முகாமிட்டுள்ள தனிப்படையினர் அவர்களைப் பிடிக்க கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளனர்.

சொகுசு வாழ்க்கைக்காகவே கொள்ளை

கொள்ளைக் கூட்டத்தின் தலைவர்களில் ஒருவரான சவுகத் அலி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு தலைவரான சஹதப் கான் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் அவரைப் பிடிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் கொள்ளையடித்த பணம் அனைத்தையும் ஆடம்பரமான சொகுசு வாழ்க்கை வாழவே பயன்படுத்தியதாகவும், தற்போது கொள்ளையடித்த அனைத்தையும் செலவழித்து விட்டதாகவும் கைதான கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கூட்டுறவு சங்க கடன் குறித்து இணையத்தில் வெளியிடக்கோரிய வழக்கு: ஐ.டி. முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு'

Last Updated : Jul 2, 2021, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details