சென்னை: தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வங்கி ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து கடந்த 17ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின.
முப்பதுக்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் ஒரு கோடிக்கும் மேலாக பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. குறிப்பாக எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் மிஷினிலிருந்து (வைப்புத்தொகை இயந்திரம்) மட்டுமே நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
அதில் சென்னையில் மட்டுமே 15 ஏடிஎம்களிலிருந்து 50 லட்சம் ரூபாய்வரை கொள்ளையடிக்கப்பட்டது.
ஹரியானாவைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள் குழுக்களாகப் பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் ஹரியானா விரைந்தனர்.
ஹரியானா மேவாட் மாவட்டம் முழுவதும் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவதை இந்தக் கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து ஹரியானா காவல் துறையினர் உதவியுடன் அமீர், அவரது கூட்டாளி வீரேந்தர் ராவத் ஆகியோரை கைதுசெய்தனர்.
இவர்களை சென்னைக்கு வந்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். அதில் அமீரை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் ஹரியானாவில் மூன்றாவது கொள்ளையனை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட கொள்ளையனிடமிருந்து கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் அவரை சென்னைக்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மீதமுள்ள ஏழு கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'திமுகவையும் மின்வெட்டையும் பிரிக்க முடியாது' - நத்தம் விசுவநாதன் கிண்டல்