சென்னை: வீரங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளர் நாகராஜன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து, அவரை விடுதலை செய்யக்கோரி, மனைவி கிரேஸ் ஹெலினா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், எந்த காரணங்களும் இல்லாமல் நாகராஜனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குண்டர் சட்டத்திற்கு எதிராக மனு
மேலும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க பிறப்பித்த உத்தரவுகள் குறித்த ஆவணங்கள் தெளிவாக வழங்கப்படவில்லை எனவும், மொழிபெயர்க்கப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட நாகராஜனை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது எனவும், வழக்கு தொடர்பான சம்பவம் 2013 முதல் 2020 வரை நடந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்க எந்த அவசியமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழ்நாடு உள்துறை செயலாளர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது.
பாலியல் புகாரில் சிக்கிய பயிற்சியாளர் நாகராஜன் பாலியல் வழக்கு
நந்தனத்தை சேர்ந்த நாகராஜன், பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற தடகள பயிற்சி மையத்தை பிராட்வே பகுதியில் நடத்தி வருகிறார். மத்திய அரசு பணியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற பயிற்சியாளர் நாகராஜன் மீது, தனக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சி வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன்படி, நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மே 28ஆம் தேதி கைதான நாகராஜன் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரைகுண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஜூன் 26ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.