சென்னையைச் சேர்ந்த அசோகன் என்பவர், சில நாட்களுக்கு முன்பு அனந்தசரஸ் குளத்தை தூர்வாரக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய மூன்று துறைகளும், அனந்தசரஸ் குளத்தை தூர்வார்தல் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டார்.
அதற்கு பதிலளித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அனந்தசரஸ் குளம் தற்போது முழுமையாக தூர்வாரப்பட்டுள்ளது என்றும், எனவே மழைநீரால் குளம் நிரம்பாவிட்டால் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் நீர் மூலம் குளம் நிரப்பப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
இதற்கு பதில் கூறிய நீதிபதி ஆதிகேசவலு, பொற்றாமரை குளத்தின் நீரைக் கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டாம் என்றும், மாறாக இயற்கையாக கிடைக்கக்கூடிய மழைநீர் அல்லது கோயில் வளாகத்தில் இருக்கும் ஆழ்துளை கிணற்று நீர் ஆகியவற்றின் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.