சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனரின் மகன் சாமூவேல். இவர் தற்போது பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மாணவர் சாமூவேலிடம் செல்போன் இல்லாததால் அவரால் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் படிப்பில் உள்ள ஆர்வத்தால், செல்போன் வாங்குவதற்காக மாணவர் சாமூவேல், கோயம்பேடு பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிக்குச் சென்றுள்ளார். படிப்பதற்காக கால்வாய் துார்வாரிய இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதைத் தொடர்ந்து, புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா, மாணவர் சாமூவேலுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய செல்போன் ஒன்றையும், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் பரிசாக வழங்கியுள்ளார்.