சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே அமைந்துள்ள ( ஜூனியர் குப்பண்ணா) பிரபல தனியார் உணவகத்திற்கு நேற்று விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் உணவருந்த சென்றுள்ளார். பின்னர் கார்த்தி சிக்கன் பிரியாணி, ஆட்டுக்கால் சூப், இட்லி, கலக்கி உள்ளிட்ட உணவு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து உணவகம் வழங்கிய சிக்கன் பிரியாணியில் இருந்து தூர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த கார்த்தி இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்ட போது, பிரியாணி கெட்டு போனதை அவர்களும் ஒப்பு கொண்டதாக கார்த்தி தெரிவித்தார்.
மேலும் இந்த பிரச்சனையை பெரிதாக்காமல் விட்டு விடும்படியும், அதற்கு பதிலாக வேறு பிரியாணி தருவதாக சொல்லியதாக கார்த்தி தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக இருக்கிறதா என உறுதி செய்யாமல் அது குறித்து விசாரிக்கும் போது பொறுப்பற்ற முறையில் பதில் கூறுவதாகவும் கார்த்தி ஸ்ருதி தம்பதியினர் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அந்த உணவை தங்கள் 2 வயது குழந்தை உட்கொண்டிருந்தால் நிலைமை என்ன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் குறித்து கார்த்தி காவல் துறையிடம் தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து உணவக நிர்வாகத்திடம் கேட்ட போது, தாங்கள் வழங்கிய பிரியாணி கெட்டுப் போகவில்லை என தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறையை தொடர்பு கொண்டபோது எந்த பதிலும் இல்லை என வாடிக்கையாளர் கார்த்தி தெரிவித்தார்.