சென்னை: வளசரவாக்கம் பகுதியில் 35 வயதான சினிமா துணை நடிகை ஒருவர், கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம்(மார்ச்.08) துணை நடிகை வீட்டிலிருந்தபொழுது யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து நடிகை கதவைத் திறந்து பார்த்தபோது வாசலில் அடையாளம் தெரியாத இருவர் நின்று கொண்டிருந்தனர். கதவைத்திறந்த நொடியில், சட்டென வீட்டிற்குள் புகுந்த அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி, நடிகை அணிந்திருந்த 6 கிராம் செயின், போட்டிருந்த கம்மலை பறித்துக் கொண்டனர்.
பின்னர் அந்தக் கும்பல் வீட்டிலிருந்த 50ஆயிரம் பணத்தைத் திருடிக்கொண்டு, கத்தி முனையில் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து, அதை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனால் பதற்றமடைந்த நடிகை உடனே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் இரவு பணியிலிருந்த விருகம்பாக்கம் ஆய்வாளர் தாம்சன் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று நடிகையிடம் விசாரணை நடத்தினார். பின்னர் நடிகை இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்தப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன்பின் சம்பவயிடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் மற்றும் அவருடைய நண்பர், துணை நடிகை வீட்டிற்குள் வந்தது பதிவாகி இருந்தது. இதனையடுத்து குன்றத்தூரில் பதுங்கி இருந்த கண்ணதாசனை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னொரு நபரான செல்வகுமாரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.