அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியைச் சேர்ந்த ஜாய்ஸ்மிதா சாண்டோ என்ற சிறுமிக்கு திடீரென வலது முழங்காலில் கடுமையான வலி ஏற்பட்டு அசைவுகள் பாதிக்கப்பட்டன. கடும் வலியால் துடித்த அச்சிறுமி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பரிசோதனை செய்ததில் ’டிஸ்காய்ட் லேடரல் மெனிஸ்கஸ் டியர்’ என்ற குறைபாட்டால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
மெனிஸ்கஸ் மூட்டுப்பகுதி தசைக் குருத்தெலும்பு என்பது முழங்காலை பாதுகாக்கும் வகையில் அதிர்வுகள் மற்றும் அசைவுகளை ஏற்கும் நெகிழ்வு தன்மை கொண்ட மென்மையான குருத்தெலும்பு ஆகும். பிறக்கும் போது டிஸ்காய்டு மெனிஸ்கஸ் இருந்தால் சிலருக்கு முழங்கால் இயக்கங்களின்போது காயங்கள் ஏற்படக்கூடும். வழக்கமான செயல்பாடுகளின்போது அல்லது விளையாடும்போது முழங்கால் அசைவில் ஏற்படும் மாற்றங்களால் இந்த காய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலை ஏற்பட்டால் பெரும்பாலும் அந்நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையே பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு, ஆர்த்ரோஸ்கோபிக் லேடரல் டிஸ்காய்டு மெனிஸ்கஸ் சாஸரைசேஷன் சிகிச்சை முறை செய்யப்பட்டு, அதன் மூலம் அந்தக் குறைபாடு சரி செய்யப்பட்டது. கீஹோல் முறையிலான இந்த சிகிச்சையில் குழந்தைகளுக்கென்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன கருவி பயன்படுத்தப்பட்டது.