சென்ற ஆண்டு செப்டம்பரில் ’கரீபியன் லீக் 20’ கிரிக்கெட் போட்டி, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை சூளைப் பகுதியில் ஆன்லைன் மேட்ச் பிக்சிங் சூதாட்டம் நடைபெற்றது. அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் 40 லட்சம் ரூபாயை சூதாட்டத்தில் இழந்துவிட்டதாக, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் சூளை சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராகுல் டி ஜெயின் (24), தினேஷ் குமார் (29) ஆகிய இருவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப்கள், 53 லட்சம் ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவற்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்திய விசாரணையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கியக் குற்றவாளி ஜெய்ஷா என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ஜெய்ஷாவை நான்கு மாத தேடுதலுக்குப் பிறகு நேற்று மயிலாப்பூரில் பதுங்கி இருக்கும்போது தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சம்பவத்தன்று காவல் துறையினர் நடத்திய சோதனையில் 93 லட்சம் ரூபாய் கைப்பற்றபட்டதாகவும், அதில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த புகார்தாரருக்கு அங்கேயே 40 லட்சத்தை ஆய்வாளர் குணவர்மன் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதமிருந்த 53 லட்சம் ரூபாய் பணத்தை சூதாட்டக்காரர்களிடம் பறிமுதல் செய்த பணம் என்று காண்பித்ததாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதற்காக ஆய்வாளர் குணவர்மன் புகார்தாரரிடமிருந்து ஏழு லட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.