ஜெயலலிதாவின் கொடநாடு மாளிகைக்குள் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நுழைந்த கும்பல், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து விட்டு, பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது. இது தொடர்பாக, சயான், மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தீபு, சதீசன், சந்தோஷ் ஆகியோர், நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த பிடியாணை உத்தரவை திரும்பப் பெறக்கோரி தீபு உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.