கரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர்களின் நலனை கருத்தில் கொண்டு இறுதி பருவத்தேர்வு தவிர, பிறப்பருவப் பாடங்களின் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு, தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
அதனடிப்படையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் அரியர் தேர்வுக்கு பணம் செலுத்திய மாணவர்களுக்கு, அரசின் வழிகாட்டுதல்படி குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்க பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை மேற்கொண்டன. அதில் சென்னை பல்கலைக்கழகம் முதலில் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் இன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.