தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

‘எனது பிள்ளை வீடு திரும்புவானா?’ - ஏங்கும் தாய்..! - அற்புதம் அம்மாள் ட்வீட்

சென்னை: எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது என்று சொன்ன காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளிலாவது தன் மகன் வீட்டிற்கு வருவானா என்ற ஏக்கத்துடன் அற்புதம் அம்மாள் ட்வீட் செய்துள்ளார்.

அற்புதம் அம்மாள்

By

Published : Oct 2, 2019, 1:54 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி, கடந்த1991ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறை அலுவலர்கள், பொது மக்கள் என மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை சிறப்புப் புலனாய்வுத்துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

இது தொடர்பாக எந்த தெளிவுகளும் இன்றி கைது செய்யப்பட்ட ஏழு பேரும் 29 ஆண்டுகளாகச் சிறையில் அடைபட்டுக்கிடக்கின்றனர். இவர்களின் விடுதலை தொடர்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஏழு பேரின் விடுதலையில் மாநில அரசு முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநரின் பரிந்துரைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இந்நாள் வரையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த தீர்மானத்தில் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர். இந்த சூழலில் ஏழு பேரின் விடுதலையில் ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்பதை பல இயக்கங்களுடன் சேர்ந்து பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.

இந்நிலையில், அற்புதம் அம்மாள் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், "எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக் கூடாது" என்று சொன்ன காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளிலாவது அறிவு உள்ளிட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்” என்று உருக்கத்துடன் எழுதியிருந்தார்.

இதனையடுத்து இன்று அவர் வெளியிட்ட பதிவில், “காந்தியின் 100ஆவது பிறந்த நாளில் நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்டோர் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர் 150ஆவது பிறந்தநாளில் மாநில அரசின் விடுதலை பரிந்துரைக்கு ஆளுநர் மதிப்பளிப்பாரா? எனது பிள்ளை வீடு திரும்புவானா?” என்று ஏக்கத்துடன் அரசுக்கு தன் கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details