சென்னை : வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைப் பூர்விகமாக கொண்டவர் சந்தோஷ்குமார் (34). இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 20ஆம் தேதி சந்தோஷ் குமாருக்கும் அவரது காதலிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கரோனா பரவல் காரணமாக திருமண தேதி முடிவாகாமல் இருந்தது.
இந்தநிலையில் சந்தோஷ்குமார் பெற்றோர் மற்றும் பெண் வீட்டாரிடம் உடனே திருமணத்தை நடத்துமாறு தெரிவித்துள்ளார். இருந்தும் இருவீட்டாரும் திருமண தேதியை முடிவு செய்யாமல் இருந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், நேற்று (நவ.1) இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தன் காதலியை நேரில் சந்தித்து திருமணம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சந்தோஷ்குமார் கையில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காதலி உடனடியாக சந்தோஷ்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆயுதப்படை காவலர் தற்போது நலமுடன் உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சி.எம்.பி.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :திமுக பிரமுகர் உயிரிழப்பு : மருத்துவக் கல்லூரி சாலையில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர்