சென்னை: பாஜக அறிவுசார் துறைத்தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, ரஜினிகாந்தின் தொடங்கப்படாத கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ரஜினியின் திடீர் பின்வாங்கலால் கடந்த பிப்.27 அன்று இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியைத் தொடங்கினார். அதன்பின் பரபரப்பாக அடுத்தடுத்து "ரோபோட்" சின்னம் அறிவிப்பு; தேர்தல் அறிக்கை வெளியீடு என செயல்பட்டவர், தன் நண்பர் ரஜினியின் பாணியில் இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசியலில் ஒரு மாற்றத்தின் அவசியமும், நம் தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடனும் சேவை செய்வதற்கு ஒரு முற்போக்கான, நேர்மையான அரசியல் கட்சியின் வலுவான தேவையும்தான் புதிய அரசியல் கட்சியான நமது இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
2021 பிப்ரவரி 26ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணையைத் தேர்தல் ஆணையம் அறிவித்த ஒரு நாளைக்குப் பிறகு, பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. ஆரம்பகட்ட முயற்சியாக, வரும் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பங்கேற்க வேண்டும் என்ற திட்டமும் கட்சிக்கு இருந்தது.
கால அவகாசம் போதாமையால், நேரத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் இருந்தோம். இருந்தும் 2021 மார்ச் 9ஆம் தேதி எங்கள் புதுமையான, மிக்க நம்பிக்கை அளிக்கும் சின்னமான "ரோபோட்" என்ற "எந்திரன்" மற்றும் எங்கள் புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மிகுந்த உற்சாகத்துடனும் பாராட்டுதலுடனும் வரவேற்றன.
அடுத்த சில நாட்களிலேயே, எங்கள் இ.ம.மு. கட்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு நலன் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை மற்ற முன்னணி அரசியல் கட்சிகள், தமது தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளடக்கி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த நலனுக்காக எங்கள் புதுமையான மற்றும் புரட்சிகரமான தேர்தல் அறிக்கையை, அதன் சாராம்சமான கருத்துகளை அவர்கள் வழிமொழிந்ததை நாங்கள் மனமார பாராட்டுகிறோம்.
ஆனால், உண்மை என்னவென்றால், காலத்திற்கு எதிரான ஒரு பந்தயத்தில் நாம் களமிறக்கப்பட்டுள்ளோம். எங்கள் சத்தியம், சமத்துவம், சமர்ப்பணம் என்ற கொள்கைகள் தான் எமது அனைத்து பணிகளுக்கும்; செயல்முறைகளுக்கும் வழிகாட்டுகின்றன.