சென்னை:சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடங்கப்படும் திட்டத்தை கடந்த 5ஆம் தேதி தொடங்கி வைத்தனர். அதன் அடிப்படையில் 26 தகை சால் பள்ளிகளும் 15 மாதிரிப்பள்ளிகளும் நடப்பு கல்வியாண்டு முதலே செயல்பட உள்ளது.
ஆயிரத்திற்கும் மேல் மாணவர்கள் கொண்ட அரசுப்பள்ளிகள் தகை சால் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன.அந்தப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள், நவீன கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், விளையாட்டு, கலைகள், இலக்கியம் என அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை நேரிடையாகவும், இணைய வசதிகளை பயன்படுத்தியும் கற்றல் திறன்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துகின்ற வகையில் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேல் மாணவர் எண்ணிக்கை கொண்ட அரசுப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகைசால் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் தகைசால் பள்ளிகள் என்பது தேசியக்கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களைக் கொண்டு இருப்பதாகவும், மாணவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பிலும், சமமான கட்டமைப்பிலும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தேசியகல்விக் கொள்கை:மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,”பள்ளிக் கூடத்தைப் பொறுத்தவரையில் உலகளவில் பள்ளிக்கு தேவையானவற்றை செய்துகொடுக்கும் முறைதான் இருக்கிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் எத்தனைப் பேர் எத்தனை மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை பொறுத்து வசதிகள் செய்து கொடுத்தால் அது முதலீட்டு முறையாகும்.
உற்பத்தியின் தேவைக்கு தகுந்தார் போலவும் முதலீட்டை அதிகரித்துக்கொண்டு இருப்பது என்பது பள்ளிக்கல்விக்கு பொருந்தாது. இன்றைக்கு பள்ளிக்கல்வித்துறையிலேயே முதலீட்டு முறையை கொண்டு வருகின்றனர்.
அது மிகவும் ஆபத்தானது எனவும், தேசியக்கல்விக்கொள்கையில் உள்ளதால் அதனை ஆரம்பித்ததில் இருந்தே எதிர்த்து வருகிறோம். பலவீனமாக உள்ள பள்ளிகளை மூடச்செய்வது அல்லது தானாக அழியச்செய்வது, பள்ளி வளாகத்தை மாற்றுவது அல்லது அந்தப் பள்ளியை வேறுபள்ளியுடன் இணைத்து விடுவது இதைத்தான் தேசியகல்விக் கொள்கை கூறுகிறது.
தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலப் பள்ளிகளை தகைசால் பள்ளிகள் என கூறுகின்றனர். சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே ஸ்டார் ஸ்கூல் துவக்கப்பட்டுள்ளது. தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை ஆணையராக இருப்பவர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது எலைட் ஸ்கூல் என தொடக்கினார்.
சிறப்பாக படிக்கும் மாணவர்களைக்கொண்டு வந்து சேர்த்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்தார். பள்ளிக்கு எந்தவகையில் பெயர் வைத்தாலும், அதற்கு பக்கத்தில் இருக்கும் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்னவாறு எடுத்துக்கொள்வார்கள்.
சமச்சீர்கல்விக்கு எதிரானது: எதனையும் இலவசம் எனக் கூற முடியாது. அரசிற்கு கட்டும் வரிப் பணத்தில் இருந்து தான் கொடுக்கின்றனர். அப்போது எப்படி இலவசம் எனக் கூறுகின்றனர் என்பது தெரியவில்லை. விலையில்லா பொருட்கள் என எப்படி கூறுகின்றனர் என்பதும் தெரியவில்லை. குழந்தைகளுக்கு கல்வி, புத்தகம் போன்றவற்றை அளிப்பதற்குத்தான் வரியை கட்டுகிறோம்.
மாணவர்களுக்கு சரிசமமான வாய்ப்பினை உருவாக்கி கொடுக்காமல் ஒரு பள்ளியை தகைசால் பள்ளி எனவும், மற்றொரு பள்ளியை சாதராணப்பள்ளி என கூறினால், இரண்டு பள்ளியிலும் படிக்கும் மாணவர்களின் மனநிலை என்ன? , இந்த சிக்கல் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் அறிவிக்கப்பட்ட சமச்சீர்கல்வியின் பிரதானமான அம்சம்.
குறிப்பிட்டப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சிறந்தவர்கள், குறிப்பிட்ட பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற மனப்பான்மையை உருவாக்கி விடும். எனவே சமச்சீர்கல்வி வேண்டும் என போராட்டம் நடத்தினோம். அதனைத் தொடர்ந்து சமச்சீர்கல்வியை கொண்டு வந்தனர். அது தொடக்கம் தான். அதனைத் தொடர்ந்து அருகில் பள்ளிகளை அறிவித்திருக்க வேண்டும். முத்துக்குமரன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் சமமானக்கல்வியை அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
சமச்சீர் கல்விக்கு எதிராக மீண்டும் ஏற்றத்தாழ்வு மிக்க கற்றல் முறையை உருவாக்குவேன் என்று சொல்வது எந்தவகையில் நியாயம். ஒன்றிய அரசு பிஎம்ஸ்ரீ ஸ்கூல் என கூறுகின்றனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தேசியகல்விக்கொள்கை 2020 சோதிக்கும் மாதிரி லேப் என கூறுகின்றனர். ஏற்கெனவே இருக்கும் அரசுப் பள்ளியை மாதிரிப்பள்ளியாக மாற்றுகின்றனர். ஒன்றிய அரசு கூறுவதுற்கும், இவர்கள் கூறுவதற்கும் பெயர் வேண்டுமானல் வேறாக இருக்கலாம். பெயர் மாற்றத்தை தவிர வேறு எதுவும் மாற்றம் இருக்கிறதா? என்பது தான் கேள்வி.
மாணவர்களிடையே பாகுபாடு: அரசுப்பள்ளியில் போதுமான ஆசிரியர்கள், அலுவலகப் பணிகள் செய்ய பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட அனைத்தையும் அளிக்க வேண்டும். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கத்தை ஏற்படுத்த கல்வி இணைச் செயல்பாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அளித்த பேட்டி வசதிப் படைத்த பெற்றோர்களால் இதனை செய்ய முடிகிறது. வசதியும், வாய்ப்புமற்ற , சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சமமான கற்கும் வாய்ப்பினை தொடக்கப்பள்ளிகளில் கொடுக்காவிட்டால், அவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தை உண்டு பண்ண முடியுமா?. தொடக்கப்பள்ளியில் சமமானக்கல்வியை கொடுக்காமல், மேல்நிலைப்பள்ளியில் வைக்கக்கூடிய தேர்வுகளில் எப்படி சமமான மாணவர்களை எதிர்பார்க்க முடியும்.
சமமற்றவர்களை உருவாக்கி தேர்வினை மட்டும் சமமாக வைப்பேன் என்பது மாணவர்கள் மீது தொடுக்கப்படும் மிகப்பெரிய வன்முறை இல்லையா?. தமிழ்நாடு அரசு சமமான கற்றல் வாய்ப்பினை வழங்கக்கூடிய சமச்சீர் கல்வியை உள்வாங்கி மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும் வகையில் சிலப் பள்ளிகளை மாதிரிப்பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என எந்தப் பெயர் வைத்தாலும் இது பாகுபாடு, கொண்டு சமூக அமைப்பை ஏற்றத்தாழ்வு மிக்க ஒரு சமூக அமைப்பை, கல்வியின் மூலம் நியாயப் படுத்துவதாகவே அமையும்.
பள்ளிகளில் கட்டமைப்பை சிதைக்கும்: தேசிய கல்விக்கொள்கை குறித்து ஒன்றிய அமைச்சரவை கொள்கை முடிவு எடுத்து இந்தியா முழுவதும் அறிவிக்கிறது. கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு போன பிறகு கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சி தனியார் துறையில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. அரசுத்துறைப் பள்ளிகள் மாநிலப் பட்டியலில் இருந்தபோது தான் வளர்ச்சி அடைந்துள்ளது.
மாநில அரசிற்கு கொள்கைகளை வகுத்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறையில் முழு சுதந்திரம் அளித்துள்ளது. தமிழ்நாடு மாநில அமைச்சரவை இது குறித்து விவாதம் நடத்தியதா? என்பது தான் நாம் எழுப்பக்கூடிய கேள்வி. கல்விக்கொள்கையை வரையறைச்செய்ய குழுவை போட்டுள்ளனர். அந்தக்குழுவின் அறிக்கை வந்தபின்னர் தான் முடிவு எடுக்க முடியும்.
ஒன்றிய அரசு, அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பை சிதைக்கும் என்பதை தெரிந்தே தேசியக்கல்வி கொள்கை 2020-ஐ மாநிலங்கள் மீது திணித்துக் கொண்டு இருக்கிறது. பல மாநிலங்களில் தமிழ்நாட்டினை போல் கட்டமைப்பு இல்லை என்பது தெரிந்தது தான்.
ஜனநாயகம் பலவீனப்படுகிறது: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கல்வியின் கட்டமைப்பை சிதைப்பது தான் தேசியக்கல்விக்கொள்கையின் நோக்கம் என்பது தெரிந்தும் அதன் கூறுகளை அலுவலர்கள் எப்படி நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். புதியதாக பெயர்களை வைத்து , அது தேசியக்கல்விக் கொள்கை கிடையாது என கூறுகின்றனர்.
இந்தப் போக்கு நீடிக்குமேயானல் கர்மவீரர் காமராஜர் கையேந்தி கட்டிய அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி என்கிற கட்டமைப்பு தகர்க்கப்பட்டு விடும் என்றால், சமூகத்திற்கு கல்வியின் மீது இருக்கும் நம்பிக்கை தளர்ந்து, கல்வி பலவீனப்படுகிறது என்றால், மக்களாட்சி பலவீனப்படுகிறது என்று அர்த்தம். ஜனநாயகம் பலவீனப்படுகிறது என்பது அர்த்தம்.
எனவே பள்ளிக்கல்வியில் சமமான சீரான கற்றல் வாய்பினை தரக்கூடிய ஒரு கொள்கையை மாநில அரசு முன்வைக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளையும் வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும். இதனை போர்க்கால அடிப்படையில் செய்தால் தான் பள்ளிக்கல்வித்துறையை மீட்டெடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்கள்:'ஸ்டாலினோ நீங்களோ முதல் தேர்தலில் வெற்றி பெறவில்லை' - சந்திரசேகர ராவுக்கு அண்ணாமலை பதிலடி