சென்னை: கபாலீஸ்வரர் கோயிலில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல், அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டத்தினை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
மேலும், தமிழில் அர்ச்சனை செய்யும் குழுக்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் அடங்கிய விவரங்களைக் கொண்ட பெயர்ப் பலகையையும் திறந்து வைத்தார்.
இத்திட்டத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் 47 திருத்தலங்களிலும், தமிழில் அர்ச்சனை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
மேலும், கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய ரூ. 5 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
60 ஆண்டுகளாக தமிழ் அர்ச்சனை பயணம்: கடந்து வந்த பாதை
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என்ற விவகாரம் கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. மேலும், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யவேண்டும் என 1955ஆம் ஆண்டு முதலே போராட்டங்கள் நடந்துள்ளன.
குன்றக்குடி மடத்தின் அப்போதைய ஆதினம் தெய்வசிகாமணி அருணாச்சல தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள், தமிழில் அர்ச்சனை செய்வதற்கு ஆதரவாக இருந்துள்ளார். இதேபோல்,
- லால்குடி பூவாளூர் கிராமத்தில் உள்ள திருமூலநாத சுவாமி கோயிலில் 1969இல் தமிழில் அர்ச்சனை நடத்தப்பட்டது.
- அனைத்துக் கோயில்களும் தமிழில் அர்ச்சனை எனப்படும் முறையை 1971ஆம் ஆண்டு அப்போதைய அறநிலைத் துறை அமைச்சர் கண்ணப்பன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதை ஆதரித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பேசினார்.
- கோயில்களில் தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யவேண்டும் என 1924இல் அறநிலையத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
பின் அது திரும்பப்பெறப்பட்டது.
- எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் 1980இல் அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் கோயில்களில் தமிழ் அர்ச்சனையை வலியுறுத்தினார்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 1982இல் தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படும் என அறங்காவலர் குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.