தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவை எதிர்த்தும், அர்ச்சகர் தேர்வுக்காக வெளியிடப்பட்ட விளம்பரங்களை எதிர்த்தும் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் மனு தாக்கல் செய்திருந்தது.
ஆனால், அந்த மனுவை கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இந்நிலையில் வழக்கில் தங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்க தலைவர் வா.ரங்கநாதன் மீண்டும் இடையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், அரசால் அமைக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பெற்ற பள்ளியில் சாதி பார்க்கப்படாமல் அனைத்து சாதி மாணவர்கள் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார்.