இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் பணத்தைக்கொள்ளை அடிக்கும் நோக்கில் சாலை போடாமலேயே ரூ.5 கோடி சங்கர் ஆனந்த் இன்ஃப்ரா என்னும் ஒப்பந்ததாரருக்கு கரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மார்ச் 2022-இல் பணம் கொடுத்து ஊழல் நடந்தது.
இதன் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஏப்ரல் 20இல் புகார் அளித்தது. தற்பொழுது கூடுதல் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. மேலும் துறை ரீதியான விசாரணை செய்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.
6 மாதங்கள் ஆகியும் இதுவரை FIR கூட பதிவு செய்யப்படவில்லை. அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக மேலும் பல ஆதாரங்களை திரட்டியது. இதை முதன்முதலில் வெளி கொண்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச்செயலரிடம் புகார் கொடுத்தார்.
சாலை போடாமலேயே பணம் கொடுத்தார்கள் என்ற அவரது குற்றச்சாட்டு உண்மை என்று கண்காணிப்புக்கு பொறியாளர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததின் அறிக்கை நகலினை RTIஇல் பெற்று அறப்போர் இயக்கம் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பியுள்ளது.
மேலும் மாநில நெடுஞ்சாலைத்துறையில் தரச்சான்று கோட்ட பொறியாளர் இடம் இருந்து தரச்சான்று பெற்ற பின்பே ஒரு சாலைக்குப் பணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், சாலையின் தரம் சோதனை செய்யப்படவில்லை என்றும், அதற்கான எந்த சான்றும் வழங்கப்படவில்லை என்றும் தரச்சான்று கோட்ட பொறியாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக கொடுத்த ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத் துறையில் சமர்ப்பித்துள்ளது. மார்ச் மாதம் சாலை போட்டது போல தயாரிக்கப்பட்ட போலி M BOOK நகல் மற்றும் பில் செலவினங்கள் கொடுக்கப்பட்ட ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையில் சமர்ப்பித்துள்ளோம்.