தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கழிவுநீர் சுத்திகரிப்பு: பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை சென்னை மாநகராட்சி பின்பற்ற வேண்டும் - அறப்போர் இயக்கம் - Corporation must follow ban imposed by Green Tribunal in Chennai

வில்லிவாக்கம் ஏரியில் அமைக்கப்படும் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்றவை ஏரி பகுதிக்குள் கட்ட பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது எனவும்; இதை மாநகராட்சி பின்பற்ற வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் கேட்டுக்கொண்டு உள்ளது.

அறப்போர் இயக்கம்
அறப்போர் இயக்கம்

By

Published : Feb 2, 2022, 9:28 PM IST

சென்னை:வில்லிவாக்கம் ஏரியில் அமைக்க உள்ள பொழுதுபோக்குப் பூங்கா மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ஆகியன அமைப்பது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்தது. அதனை சென்னை மாநகராட்சி பின்றபற்ற வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த இயக்கம் மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அறப்போர் இயக்கம் வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கரைச் சீரமைக்க 2016ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

அது பிறகு 2017ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. மெட்ரோ ரயில் மண் 20 ஏக்கருக்குக் கொட்டப்பட்டு மூடுவதற்கான வேலை நடந்த இந்த ஏரி, அந்த வழக்கின் தொடர் ஆணைகளால் தற்பொழுது சீரமைக்கப்பட்டு வருகிறது.

39 ஏக்கரில் முதல் கட்டமாக 27.5 ஏக்கர் ஏரியை சென்னை குடிநீர் வழங்கல் துறை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைத்தது.

தன் வசம் 11.5 ஏக்கர் நிலம் வைத்துக்கொண்டது. அந்த 11.5 ஏக்கரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட CMWSSB திட்டம் தீட்டியது.

ஆனால், 2017ஆம் ஆண்டு அக்டோபர் ஆணையிலேயே அது தடை செய்யப்பட்டு, மேலும் எந்த கட்டுமானமும் செய்யக்கூடாது என்றும்; மேலும் குடிநீர் வழங்கல் துறை அந்த 11.5 ஏக்கர்களை எப்படிச் சீரமைக்கப் போகிறது என்ற திட்டவரைவு பற்றியும் பசுமை தீர்ப்பாயம் கோரியது.

சென்னை மாநகராட்சித் திட்டம்

மீதமுள்ள 27.5 ஏக்கர் நிலத்தை முழுவதுமாக ஏரியாகச் சீர் செய்யாமல், அதில் ஒரு பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா போன்றவை கட்ட மாநகராட்சி திட்டமிட்டு வேலை செய்து வருகிறது.

ஆனால், 39 ஏக்கர் ஏரியை முழுவதுமாக சீர் அமைக்க வேண்டும் என்ற அறப்போர் கோரிக்கை ஏற்றுப் பசுமை தீர்ப்பாயம் மீண்டும் முக்கிய ஆணையை 2022ஆம் ஆண்டு ஜன.7ஆம் தேதி அன்று பிறப்பித்துள்ளது.

அறிக்கை தாக்கல்

கழிவுநீர் சுத்திகரிப்பு: பசுமை தீர்ப்பாயம் விதித்த தடையை மாநகராட்சி பின்பற்ற வேண்டும் - அறப்போர் இயக்கம்

இதில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு போன்றவை ஏரிக்கு வெளியில் இருக்க வேண்டும் என்றும்; அவை ஏரிப் பகுதியில் இருக்கக்கூடாது என்றும்; அவ்வாறு ஏரி பகுதிக்குள் கட்ட பசுமை தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளதையும் தெளிவாக இந்த ஆணையில் தெரிவித்துள்ளது.

மீறிக் கட்டினால் அவை இடிப்பதற்கான ஆணையை எதிர்பார்க்கலாம் என்றும்; தேவை இல்லாமல் மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு இழப்பு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைகளை மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் பின்பற்ற வேண்டும்.

மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மாநகராட்சி ஆணையர் மற்றும் குடிநீர் வழங்கல் இயக்குநர்களை இது குறித்து அறிக்கைத் தாக்கல் செய்யப் பசுமை தீர்ப்பாயம் கேட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: எலிப்பொறியுடன் மனுதாக்கல் செய்த ஏர்கிராஃப்ட் இன்ஜினியர் - இது மதுரை சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details