சென்னைவள்ளுவர் கோட்டத்தில் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ’கொள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கத்தை எழுப்பி ஊழல்வாதிகளுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று(ஜூன்.19) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது ஊழல் செய்த அலுவலர்களின் பட்டியலை வெளியிட்டும் அவர்கள் செய்த ஊழல்கள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ”ஊழல் செய்த அலுவலர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊழலுக்கு எதிராக செயல்படுவோம் எனவும், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி ஆட்சிக்கு வந்தார்.
அவர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறப்போர் இயக்கத்தின் சார்பில் 15 புகார் மனுக்கள் அளித்தோம். அதில் 2 புகார் மனுக்கள் மீது முன்னாள் அமைச்சர்களின் பேரில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால், மற்ற புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் இதுவரை ஒரு அலுவலர் மீது கூட முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் ஓராண்டு ஆட்சி மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது.