தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய கடிதத்திற்கு அரசு பதிலளிக்கவில்லை' - லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய கடிதத்திற்கு அரசு பதிலளிக்கவில்லை

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி வேண்டி அரசுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய கடிதத்திற்கு அரசு சார்பில் எந்தவிதப் பதிலும் அளிக்கப்படவில்லை என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு
அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு

By

Published : Jun 26, 2022, 7:38 PM IST

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சோதனையின்போது சுமார் 13 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பல்வேறு சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், எஸ்.பி. வேலுமணி செய்த டெண்டர் முறைகேடுகளில் அவருக்கு அரசு அலுவலர்கள் உடந்தையாக இருந்ததாகவும், 4 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் உட்பட சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம்:அதுமட்டுமல்லாமல் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு டெண்டர் முறைகேட்டில் பங்கிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாகக் கூறி அவர்களையும் வழக்கில் சேர்த்து, உரிய விசாரணை நடத்த அனுமதிகோரி கடந்த நவம்பர் 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அந்த கடிதத்திற்கு இதுவரை எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் மதுசூதனன் ரெட்டி, கந்தசாமி உள்ளிட்டோரின் பெயர்களை சுட்டிக்காட்டி அவர்களுக்கு டெண்டர் முறைகேட்டில் உள்ள பங்கு என்ன என்பதை அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கிக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 7 சாலைகளின் சீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளுக்காக 13.6 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்ட நிலையில், மதிப்பிடப்பட்ட அளவிலிருந்து டெண்டர் மதிப்பு உயர்த்தப்பட்டதும், கட்டணங்கள் மற்றும் பணிகளின் அட்டவணையுடன் ஒப்பிடும்போது, அதிகப்படியான விகிதங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதே எங்கள் எண்ணம்':இதுகுறித்து அறப்போர் இயக்கம் ஜெயராமனிடம் கேட்டபோது, "முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 10 வார காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த நவம்பர் 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் டெண்டர் முறைகேடு நடக்க உடந்தையாக இருந்த அரசு அலுவலர்களை குற்றவாளிகளாக சேர்த்து அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு

ஆனால் 8 மாத காலம் ஆகியும் இன்று வரை டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய அலுவலர்களிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. எஸ்.பி. வேலுமணி கோவையில் அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த விஜய் கார்த்திகேயன் மற்றும் பொறியாளர்கள் உதவியுடன் பல்வேறு டெண்டர்களை தனது சகோதரர்களுக்கே ஒதுக்கியுள்ளார். அவர்கள் சந்தை மதிப்பைவிட மிக அதிகமாக டெண்டரை எடுத்து மிகப்பெரிய அளவில் அரசுக்கு வரிப்பண இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

சென்னையிலும் பல்வேறு ஊழல்களில் அப்போதைய மாநகராட்சி ஆணையர் பிரகாஷின் பங்கு இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற அலுவலர்கள் அறிந்தே அவர்களது கையெழுத்துடனே ஊழல்கள் நடந்துள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது.

குறிப்பாக துணை ஆணையராக கந்தசாமி ஐ.ஏ.எஸ் இருந்தபோது சாலை போடுவதில் பல்வேறு மோசடி செய்து சந்தை மதிப்பைவிட தார் மதிப்பை அதிகமாக காட்டியும், தாரின் அளவை அதிகமாக போட்டதாக கணக்கு காட்டியும் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதை லஞ்ச ஒழிப்புத்துறை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

எஸ்.பி. வேலுமணி தகுதியே இல்லாத தனது கே.சி.பி, வர்தான் போன்ற தனது சகோதரர்களின் நிறுவனங்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கி முறைகேடு செய்ததையும் லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது. ஏற்கெனவே 8 மாத காலம் தாமதமாகிவிட்ட நிலையில், இனிமேலும் அனுமதி அளிப்பதில் தாமதிக்கக் கூடாது.

ஊழல் அரசு அலுவலர்களை சிக்கவிடாமல் தடுக்கவே இவ்வாறு அனுமதி மறுக்கப்படுகிறது. எனினும் இனிமேலும் காலதாமதம் இல்லாமல் உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். சட்டப்படி இதை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதே எங்கள் எண்ணம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இது தந்தைப் பெரியாரின் திராவிட பூமி..! - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

ABOUT THE AUTHOR

...view details