அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், ”தமிழ்நாட்டில் ஜூன் 9ஆம் தேதி வரை கரோனாவால் 224 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் 460 இறப்புகள் என இருக்கிறது. இவை இரண்டிற்கும் கிட்டத்தட்ட 236 எண்ணிக்கை வித்தியாசம் இருக்கிறது.
இதில் எது உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சுகாதாரத்துறை சார்பில் குழு அமைத்து இறந்தவர்கள் குறித்த விவரத்தை மறு ஆய்வு செய்யவுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகள் இறப்பு குறித்த புள்ளி விவரத்தை சுகாதாரத்துறைக்கு அளிக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில், அறப்போர் இயக்கம் சில கரோனா இறப்புத் தகவல்களை வெளியிட்டது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 28, 29 ஆகிய தேதிகளில் இறந்த இருவரின் உடற்கூறாய்வு அறிக்கையில், ’கோவிட்’ என இருக்கிறது. ஆனால், அவர்களது இறப்பை சுகாதாரத்துறை இன்று வரை கணக்கில் காண்பிக்கவில்லை. இதேபோல் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கடந்த 4ஆம் தேதி இறந்த ஒருவரையும் கணக்கில் சேர்க்காமல் இருக்கிறது.
இறந்தவர்களின் விவரங்களை பராமரிக்க வேண்டிய முழு பொறுப்பும் சுகாதாரத்துறையையே சேரும். இதன் பின்னணியில், மரணத் தகவல்கள் மறைக்கப்படுகிறதோ என்ற மிகப்பெரும் கேள்வி எழுகிறது. இதனை சுகாதாரத்துறை இன்று வரை விளக்கவில்லை. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இறப்பு கணக்குகளை மறைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.